Sep 08

காங்கிரஸ் நடத்தும் பாரத் பந்திற்கு தமாகா ஆதரவு: ஜி.கே.வாசன் அறிவிப்பு

காங்கிரஸ் நடத்தும் பாரத் பந்திற்கு தமாகா ஆதரவு தெரிவிக்கிறது என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.   தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்துகாங்கிரஸ் கட்சி, அகில இந்திய அளவில் செப்டம்பர் 10ம் தேதி பாரத் பந்த் நடத்த அறிவித்திருக்கிறது. இந்த பந்த் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருப்பதால் தமாகா மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையிலும், மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் பந்தை ஆதரிக்கிறது.

காதர் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர்):பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய பாஜ அரசை கண்டித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சி  நாடு தழுவிய அளவில் செப்டம்பர் 10ம்தேதி பந்த் நடத்துவதாக அறிவித்துள்ளது.  இதற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவையும், கேட்டிருக்கிறது. இந்திய யூனியன்  முஸ்லிம் லீக் கட்சியும் நாடு தழுவிய அளவில் 10ம் தேதி நடைபெறும் பந்துக்கு  முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்):  பாஜ அரசின் மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்தும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் மற்றும்  இடதுசாரி கட்சிகளின் சார்பில் வரும் 10ம் தேதி நாடு தழுவிய அளவில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறது.

திருமாவளவன் (விசிக தலைவர்): பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமான பாஜ அரசைக் கண்டித்து செப்டம்பர் 10ம் தேதி பொது வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அதை விசிக சார்பில் ஆதரிக்கிறோம். பொது வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்யுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், வலதுசாரி பயங்கரவாதத்தை கண்டித்து செப்டம்பர் 10ம் தேதி காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விசிக சார்பில்  எனது தலைமையில் நடப்பதாக இருந்த ஆர்ப்பாட்டம் அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும். அதில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.  இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.