Jun 10

மத்திய கிழக்கு அகதி முகாம்களுக்கு விஜயம் மேற்கொண்ட கனேடியக் குடிவரவு அமைச்சர்

ஜோர்தான் நாட்டில் அமைந்துள்ள பாரிய அகதிமுகாம்களான Zaatari  மற்றும்  Azraq முகாம்களுக்கு அண்மையில் கனேடியக் குடிவரவு அமைச்சர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். மே 17 முதல் 27 வரை இடம்பெற்ற இவரது விஜயம் பற்றிய விபரங்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக இரகசியமாகப்  வைக்கப்பட்டன.

கனடாவின் குடிவரவு அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் மத்தியகிழக்கு அகதி முகாம்களுக்கு  இவர் மேற்கொண்ட முதலாவது விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சோமாலியாவின் உள்நாட்டு யுத்தச்சூழ்நிலையில் இருந்து தப்பி கனடாவிற்கு அகதியாக நுழைந்த அஹமட் ஹுசேனிற்கு , இவ்விஜயத்தின் போது சந்தித்த அகதிகளுடன் தொடர்பாடுவது சுலபமான ஒன்றாக இருந்திருக்கும்.

இவ் விஜயத்தின்போது அமைச்சர், ஜோர்தான், ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) , எகிப்து ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்தார். கனடாவின் குடிவரவு தொடர்பாக தலைவர்களுடனும் பங்காளர்களுடனும் கலந்துரையாடினார்.

ஜோர்தான் நாட்டு விஜயத்தின் போது மன்னர் அப்துல்லா அவரது துணைவியார் ராணியா ஆகியோரைச் சந்தித்த அமைச்சர், பல மில்லியன் சிரிய அகதிகளுக்கு ஜோர்தான் நாட்டில் அடைக்கலம் அளித்தமைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.