Sep 07

அமெரிக்க இறைச்சி சீனச் சந்தையினை இழந்துள்ளது!

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக முரண்பாட்டினைத் தொடர்ந்து, மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தகத்தினை அமெரிக்கா இழந்துள்ளது.


அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தினைச் சேர்ந்த மக்கள், விலங்கு வளர்ப்பினை மேற்கொண்டு அதன் இறைச்சியினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சுங்கவரிக் கொள்கையினால் தமது இறைச்சிகளுக்கான சந்தை வாய்ப்பினை இழந்துள்ளதாக வேர்ஜினியா மாநிலத்தினைச் சேர்ந்த மாடு வளர்ப்பில் ஈடுபடும் செத் உம்பாகர் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் வேர்ஜினியா மாநிலத்தின் கிராமப்பகுதியில் லோரல் ஸ்பிரிங்ஸ் மாடுகள் வளர்ப்புப் பண்ணையொன்றினை வைத்துள்ளேன். என்னிடம் 200 பசுக்கள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் அவை 200 கன்றுகளை ஈனும். எமது பரம்பரைத் தொழிலே இதுதான். நாங்கள் முதலில் பால் பொருட்களை மாத்திரமே விற்றுவந்தோம். 2013ஆம் ஆண்டிற்குப் பின்னர் வாழ்க்கைச் செலவு அதிகரித்த அதே சமயம் மாட்டிறைச்சிக்கான கிராக்கியும் ஏற்பட்டது. அதிலிருந்து இறைச்சிகளை விற்க ஆரம்பித்தோம். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சுங்கவரிக் கொள்கையினால் தற்போது இறைச்சி ஏற்றுமதி தடைப்பட்டுவிட்டது.

தற்போது அருகிலுள்ள உணவு விடுதிகளுக்கு இறைச்சிகளை விற்று வருகின்றோம். இச்செயற்பாடு எங்களை நட்டத்தில் தள்ளுகின்றது. கடந்த மே மாதம் அமெரிக்க அரசாங்கத்தின் வர்த்தக வேலைத்திட்டத்தில் சீனாவிற்கு பயணம் செய்யும் வாய்ப்பொன்று எனக்குக் கிட்டியது. அப்போது சீனாவில் இரசாயண ஹோர்மோன் கலந்த பதார்த்தங்களைப் பயன்படுத்தாது இயற்கை உணவுப் பொருட்களைக் கொடுத்து வளர்க்கப்படும் அமெரிக்க மாட்டிறைச்சிகளுக்கு பாரிய கிராக்கி காணப்படுவதனை உணர்ந்து கொண்டேன். எங்களுடைய இறைச்சிகளுக்கு அவர்களிடம் அதிக விலையினையும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக்களையும் கண்டேன்.

எனினும், ட்ரம்பின் சுங்கவரிக்கு நடுவில் இறைச்சியினை ஏற்றுமதி செய்ய வேண்டுமாயின் விலையில் 37 சதவீதத்தினை தண்டமாக செலவிட நேரிடும். இந்நிலையில், எங்கள் பரம்பரைத் தொழில் என்னுடன் நின்றுவிடுமென அச்சப்படுகிறேன்” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

கடந்த நாட்களில் இடம்பெற்ற சீனா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையானது வெறும் பேச்சிலேயே நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், குறித்த பேச்சுவார்த்தை விரைவில் பலனளிக்குமென நம்புவதாக குறித்த பண்ணை உரிமையாளர் செத் உம்பாகர் இறுதியாக நம்பிக்கை தெரிவித்திருந்தார்.