Sep 07

பாஸ்ரா வன்முறை ஆர்ப்பாட்டம்: ஈராக் அரச கட்டடங்களுக்கு தீ வைப்பு

அரசாங்கத்தின் ஊழல்கள் மற்றும் சேவைகளின் குறைபாடுகளினால் ஆத்திரமடைந்து ஈராக்கின் தெற்கு நகரான பாஸ்ராவில் வீதியிலறங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அரச மற்றும் முக்கிய கட்டடங்களை தாக்கியுள்ளனர்.


மாகாண அரசாங்க தலைமையகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த எதிர்பாளர்கள், அரச தொலைக்காட்சி நிறுவனமொன்றை சூழ்ந்துக் கொண்டதுடன், ஏனைய கட்டங்களுக்கு தீ வைத்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட வன்முறை ஆர்ப்பாட்டமானது நான்காவது நாளாக நேற்றும் தீவிரமடைந்திருந்தது. எவ்வாறாயினும் பாஸ்ராவில் கடந்த ஜுலை மாதம் முதல் அமைதியின்மை நிலவி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறாக தொடரும் வன்முறை ஆர்ப்பாட்டத்தில் இவ்வாரத்தில் மாத்திரம் சுமார் ஏழு பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டிற்கு உணவளிக்கும் தானிய மற்றும் பிற பொருட்கள் இறக்குமதிக்கான முக்கிய உயிர்நாடி விளங்கும் உம் கஸ்ர் துறைமுக வாயிலை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் நேற்று காலை முதல் அனைத்து செயற்பாடுகளும் தடைப்பட்டதாக துறைமுக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

நகரம் முழுவதும் பிற்பகல் 3 மணிமுதல் ஊரங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்திருந்த போதிலும், பின்னர் நிலைமை சுமூகமடைந்ததை தொடர்ந்து அந்த உத்தரவு மீளப் பெறப்பட்டது. ஆனால், ஊரடங்கு உத்தரவு மீளப் பெறப்பட்டதை தொடர்ந்து மீண்டும் வன்முறை ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்தமை குறிப்பிடத்தக்கது.