Sep 07

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை கிழக்குக்கு பெருமை சேர்க்கும்: அஸ்வர்

கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலேயே புல்லுமலையில் தண்ணீர் தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளதென காத்தான்குடி நகரசபையின் தலைவர் எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.


 காத்தான்குடி நகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“புல்லுமலை பகுதியில் பெண் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் 30 பேருக்காவது தொழில் வழங்க தீர்மானித்துள்ளேன்.

கடந்த கால யுத்தத்தின்போது அழிவுகளை சந்தித்த படுவான்கரை பகுதியினை அபிவிருத்தி செய்யும் நோக்குடனே தண்ணீர் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், தனது அரசியல் இருப்புக்காக இனமுரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் இதனை தவறான வகையில் இட்டுச்செல்கின்றார்.

இப்பகுதியில் இரு இனங்களும் முரண்பாடுகளை மறந்துவாழ முற்படும் நிலையில், இவ்வாறானவர்கள் இனங்களிடையே மோதல்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர்.

மேலும் தொழிற்சாலையை அமைப்பதற்கு அரச நிறுவனங்களில் முழுமையான அனுமதியை பெற்றே மேற்கொண்டு வருகின்றோம். இந்தவகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் வேலைகள் முழுமையாக பூர்த்திசெய்யப்பட்டு திறக்கப்படும்” என அஸ்வர் தெரிவித்துள்ளார்.