Sep 07

பொருளாதார இலக்குகளை வீழ்த்துவதற்கான ஒரு திட்டம் இருந்தது: மஹிந்தானந்தா

கூட்டு எதிரணியின் ‘மக்கள் சக்தி’ ஆர்ப்பாட்டத்தின்போது பொருளாதார ரீதியாக நாட்டின் செயற்பாடுகளை முடக்குவதற்கான பல்வேறு உபாய திட்டங்கள் காணப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தா அலுத்கமகே தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை காரியாலயத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“குறித்த ‘மக்கள் சக்தி’ ஆர்ப்பாட்டத்தில், கட்டுநாயக்க விமான நிலையம், இலங்கை மின்சார சபை, புகையிரத திணைக்களம் மற்றும் கனிய எண்ணெய் வலய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சேவைகளை முடக்கி அதனூடாக நாட்டின் ஸ்திரத்தன்மையை முறியடிக்க தீர்மானித்திருந்தோம்.

அந்தவகையில் எங்களுக்கு தேவையென்று சொன்னால் மின்சார சபையின் உதவியுடன் முழு நாட்டையும் இருளடைய செய்திருக்க முடியும். இவ்வாறு அனைத்து துறைகளின் செயற்பாடுகளையும் முடக்குவதற்கு தொழிற்சங்கங்களுடன் கதைத்திருந்தோம்.

இருப்பினும் அவ்வாறான செயற்பாட்டினை நாம் முன்னெடுக்கவில்லை என்பதுடன் அதற்கான காலம் இன்னும் வரவில்லை.

மேலும்  செப்டெம்பர் 5ஆம் திகதி கொழும்பை முற்றுகையிடுகின்றோம் என்றுதான் கூறியிருந்தோம் அதனை மாத்திரமே செய்தோம்.

எங்களின் செயற்பாட்டுக்கு அனைத்து தொழிற்சங்களும் உதவுவதற்கு தயாராக உள்ளது. இதனால் எதிர்வரும் காலங்களின் தேவையேற்படின் இதனைவிட பாரிய போராட்டமொன்றினை முன்னெடுப்போம்” என மஹிந்தானந்தா அலுத்கமகே தெரிவித்தார்.