Sep 06

சிரிய விவகாரம் தொடர்பில் மூன்று நாடுகளுக்கிடையில் கலந்துரையாடல்!

சிரியாவின் வடமேற்குப் பகுதியில் இடம்பெற்றுவரும் பயங்கரவாத செயல்களுக்கு தீர்வுகாணும் வகையில் ரஷ்யா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இணைந்து முக்கிய கலந்துரையாடலொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

ஈரானின் தெஹ்ரான் நகரில் நாளை (வெள்ளிக்கிழமை) குறித்த கலந்துரையாடலை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் ஹெய்கோ மாஸ் நேற்று துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மெவ்லொட் கௌசொக்லு ஆகியோரைச் சந்தித்து சிரியாவினால் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றியும் துருக்கி சிறையிலுள்ள பல்லாயிரக்கணக்கான சிரியக் கைதிகள் உட்பட ஜேர்மனியப் பிரஜைகள் சிக்குண்டு இருப்பது பற்றியும் கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலின் போது, சிரியாவில் பயங்கரவாதிகள் குவிந்திருக்கும் மாகாணம் எனப்படும் இட்லிப்பில் குண்டுகளை இட்டு பொதுமக்களைக் காவுகொள்ளல் பிழையான செயலாகுமென துருக்கி வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தெஹ்ரானில் இடம்பெறவிருக்கும் கலந்துரையாடலில் குறித்த தாக்குதல்களை நிறுத்துவது சம்பந்தமாக கலந்துரையாடப் போவதாகவும் துருக்கி வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், மனிதாபிமான செயலாக சிரிய அகதிகளுக்கு தங்குமிடத்தினை ஏற்படுத்திக் கொடுக்க அனைத்து அரசாங்கங்களும் கைகோர்க்க வேண்டும். அதன் பின்னரே பயங்கரவாதிகளிற்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுக்கமுடியுமென குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இதுவரை 3.4 மில்லியன் சிரிய அகதிகளுக்கு தலைநகர் அன்காரா நகரில் துருக்கி அரசாங்கம் தங்குமிடத்தினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.