Sep 06

விக்னேஸ்வரனின் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறிதனக்கு உதிராக தொடுக்கப்பட்டுள்ள மனுவை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரியவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 




நேற்று (05) உச்ச நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.​டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார். 

இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி.​ டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார். 

அதன்படி பி.​டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை கூறத்தக்கது. 

நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.​டெனிஸ்வரன் மனு தாக்கல் செய்தார். 

இதனையடுத்து வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை செப்டெம்பர் 7 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கடந்த ஆகஸ்ட் 08ம் திகதி அழைப்பாணை விடுக்கப்பட்டது. 

இந்நிலையில் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறும் தனக்கு எதிரான அந்த வழக்கை இடைநிறுத்துமாறு கோரி விக்னேஸ்வரன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவே நேற்றைய தினம் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் டெனிஸ்வரன் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி விக்னேஸ்வரன் தாக்கல் செய்துள்ள விஷேட மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 28ம் திகதி ஆராய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.