Sep 06

விடியும் வரை போராட்டம் நள்ளிரவுக்கு முன்னரே முடிந்தது-மஹிந்தானந்த

அரசாங்கத்தை கவிழ்க்கும் திடசங்கற்பத்துடன் கொழும்பில் நேற்று மாலை கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட ‘மக்கள் சக்தி கொழும்பு நோக்கி’ பேரணியைத் தொடர்ந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகபோராட்டம் இன்று விடிகாலை வரை தொடரும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அறிவித்திருந்த போதும் நள்ளிரவுக்கு முன்னரே முடிந்து போனது.நேற்று மாலை பேரணியில் பங்கேற்றவர்களின் மத்தியில் மஹிந்த ராஜபக்ஸ உரையாற்றிய போது,


இந்தப் பேரணி மிகவும் வெற்றியளித்துள்ளது. விடிகாலை வரை இந்தப் போராட்டம் தொடரும், பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்ட போதும், பெருந்தொகையானவர்கள் கொழும்பில் ஒன்று கூடினார்கள்தடைகள் ஏற்படுத்த ஏற்படுத்த கூட்டு எதிரணி பலமடையும், இதுபோன்ற போராட்டங்களை கூட்டு எதிரணி எதிர்காலத்திலும் நடத்தும்’ என்று கூறியிருந்தார்.எனினும், மகிந்த ராஜபக்சவுடன் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை மாலை 7 மணியுடன் குறையத் தொடங்கியது.


இந்தநிலையில் நள்ளிரவுக்கு முன்னரே- சுமார் 11.30 மணியுடன் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த கூட்டு எதிரணியின் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் விடியும் வரை நடத்தவிருந்த போராட்டம், நள்ளிரவுக்கு முன்னரே முடிந்து போனது.விடியும் வரை தொடரும் எனக் கூறப்பட்ட ஆர்ப்பாட்டம் நள்ளிரவுடன் நிறைவுக்குகொண்டுவரப்பட்டது ஏன் என கூட்டு எதிரணியின் முக்கிஸ்தர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் வினவியபோது


“கொழும்பு நகரை முடக்குவதே எமது பிரதான நோக்கமாக இருந்தது. அந்த இலக்கை நாம் அடைந்தோம். கொழும்பிலுள்ள அலுவலகங்களை மூடப்பண்ணினோம் . பாடசாலைகளை மூடப்பண்ணினோம். கொழும்பு நகரை ஸ்தம்பிக்கச் செய்துகாட்டி எமது இலக்கை நாம் சாதித்தோம். இலங்கை வரலாற்றில் 12மணி நேரமாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. நாம் மிகவும் அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த பின்னர் நள்ளிரவுடன் கலைந்துசென்றோம்.இத்தோடு நாம் நிறுத்தப் போவதில்லை. அடுத்து கண்டி உட்பட நகரங்களுக்கு இந்த ஆர்ப்பாட்டங்களை விஸ்தரிக்கவுள்ளோம்.