Sep 06

வடக்கின் அபிவிருத்திக்கு அவுஸ்ரேலியா ஆதரவு வழங்கும் – அவுஸ்திரேலிய தூதுவர்


இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் Bryce Hutchesson இன்று(வியாழக்கிழமை) வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் காலை 11.30 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.யுத்தத்திற்கு பின்னர் வடமாகாண மக்களின் தேவைகள் தொடர்பாகவும், அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பிலும் அவுஸ்திரேலிய தூதுவர், ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.

வடமாகாணத்தில் மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான பணிகளை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசு விருப்பம் கொண்டிருக்கின்றது. விசேடமாக தமது நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன தொழில் நுட்பத்துடனான மழைநீர் மூலமான விவசாய நடவடிக்கையினை வடமாகாணத்தில் ஏற்படுத்துவதற்கு எண்ணியுள்ளது.

அதேவேளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு ஆர்வம் கொண்டிருப்பதாக அவுஸ்திரேலிய தூதுவர் Bryce Hutchesson இதன்போது குறிப்பிட்டார்.

மனிதாபிமான கண்ணி வெடி அகற்றும் பணிகளை தமது அரசாங்கம் வடமாகாணத்தில் திறம்பட செயற்படுத்தி வருவது தொடர்பில் தெரிவித்த அவுஸ்திரேலிய தூதுவர்,வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்கள் உள்ள போதும் மிகவும் பாதிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களுக்கு அதிகளவான உதவிகள் கிடைப்பதற்கு வட மாகாணசபை நிதி ஒதுக்கீடு செய்ய ஆளுநர் பருந்துரை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.இந்தநிலையில் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்க தயாராகவிருப்பதாக ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.

அபிவிருத்திக்கு தேவையான நிதியினை இலங்கை அரசாங்கத்திற்கு, தமது அரசு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அதில் வடமாகாணத்தில் பாரிய அபிவிருத்திப்பணிகளை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசு எண்ணியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.குறித்த சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவனும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.