Sep 06

இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகள் விடுவிப்பு!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் பிடியிலிருந்த மூன்று பகுதிகளிலுள்ள காணித் தொகுதிகள் இன்று (வியாழக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளன.

மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதற்கான காணிப் பத்திரங்கள், யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியினால், மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, மயிலிட்டி கலைமகள் வித்தியாலயமும், ஆணைக்கோட்டை கூலாவடி பகுதியிலுள்ள படை முகாமொன்றும் விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பலாலி குரும்பசிட்டி பகுதியிலுள்ள பொதுநூலகம் மற்றும் பாலர் பாடசாலை உள்ளிட்ட கட்டடத் தொகுதியும் விடுவிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மயிலிட்டிக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தையும் அதனை அண்டிய பகுதிகளையும் விரைவில் விடுவிப்பதாக உறுதியளித்திருந்தார். அதற்கமைய தற்போது குறித்த காணித் தொகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.