Sep 05

மோடி வெளிநாடு சென்றபோது அவருடன் சென்ற தனி நபர்கள் யார் யார்?

டில்லி:

மோடி வெளிநாடு செல்லும்போது, அவருடன் செல்லும் தனிநபர்கள் யார் யார் என்ற விவரம் தெரிவிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்து வருகிறார். அப்போது அவருடன் அரசு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் செல்வது வழக்கம். இந்த குழுவினருடன் தனி நபர்கள் யார் யார் சென்றார்கள் என்ற விவரம் தெரிவிக்குமாறு சமூக ஆர்வலர் கரபி தாஸ் (Karabi Das) என்பவர் கடந்த அக்டோபர் மாதம் தகவல் ஆணையத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மனு செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு தகவல் ஆணையம் சரியான பதில் தெரிவிக்காத நிலையில், மனுதாரர் சார்பில் சுபாஷ் அகர்வால் என்பவர் மத்திய தகவல் ஆணையர் மாத்தூரிடம் மேல்முறையீடு செய்தார்.


இந்த மனுகுறித்து தலைமை தகவல் ஆணையம் விசாரித்தது. அப்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் பிரதமர் மோடி வெளிநாடு சென்றபோது, அவர் சென்ற தேதிகள், சந்தித்த நபர்கள், சென்ற இடங்கள், செலவுகள் மட்டுமே குறித்து வைக்கப்பட்டுள்ளன என்றும் உடன் சென்ற அரசு சாராத நபர்கள் பெயர் ஏதும் இல்லை என்றும் பதிலளிக்கப்பட்டது.

மேலும், கூடுதலாக 224 ரூபாய் செலுத்தினால், இந்த விஷயத்தில் தகவல் இருந்தால் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை விசாரித்த தலைமை தகவல் ஆணையம், பிரதமர் மோடி வெளிநாடு சென்றபோது, உடன் சென்ற அரசு சாராத தனி நபர்கள் குறித்த விவரங்களை மனுதாரருக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.