Sep 05

களவாடப்பட்ட ஹைதராபாத் அரச பரம்பரையின் உணவு பெட்டகத்தை தேடும் பொலிஸார்!

தென்னிந்திய நகரான ஹைதராபாத்தில் முன்னாள் அரச பரம்பரை குடும்பம் ஒன்று பயன்படுத்திய தங்கம் மற்றும் வைரம் பதிக்கப்பட்ட உணவு பெட்டகம் ஒன்றை தேடி பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். பெட்டகத்தை களவாடியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிலரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சந்தேகநபர்கள் ஏற்கனவே, மாணிக்கம் மற்றும் தங்கத்தால் ஆன தேனீர் கோப்பை, தட்டு, தேனீர் கரண்டி என்பவற்றையும் கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 கிலோகிராம் எடைகொண்ட குறித்த பொருட்கள் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தின் இறுதி நிஸாம் மன்னரான மிர் ஒஸ்மன் அலி கான், முற்காலத்தில் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

நிஸாம் மன்னரின் அரண்மனையிலிருந்து மீட்கப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்கள் இனம்தெரியாத சிலரால் திருடப்பட்டதாக வௌியான தகவலை அடுத்து அங்கிருந்த ஏனைய பொருட்கள் அருங்காட்சியகம் ஒன்றுக்கு மாற்றப்பட்டன.

சந்தேகநபர்கள் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், அதற்கு முன்தினம் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று கருதுகின்றனர்.  புதிய கொள்ளைச் சம்பவத்துடன் இரண்டு சந்தேகநபர்கள் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், நிஸாம் மன்னர் அலிகானின் குடும்பத்தினருக்கு சொந்தமான உடை வாள் ஒன்று பிறிதொரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் களவாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.