Sep 05

மஹிந்த அணியினரின் செயற்பாடு வெட்கக்கேடானது: ராஜித

தண்ணீர் கேட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்களை துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்தவர், இன்று அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மக்களுக்கு அழைப்பு விடுப்பது வெட்கக்கேடானது என, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


கேகாலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த அமைச்சர், அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த ஆட்சிக்காலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு துப்பாக்கியை நீட்டியவர்களே தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரத்துபஸ்வெல பிரதேசத்தில் தண்ணீர் கேட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சுதந்திர வர்த்தக வலய பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள், மீனவர்கள் என அனைவர் மீதும் கடந்த ஆட்சியாளர்கள் துப்பாக்கி வேட்டுக்கள் மூலம் பதில் வழங்கியிருந்தனர். தற்போது அவர்களே வீதியில் இறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலைகள், பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சட்டத்திற்கு பயந்தவர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.