Sep 05

எனது வாழ்வில் அரசியலுக்கு இடமில்லை: நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தினார் சங்கா

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலுக்குள் காலடி எடுத்து வைப்பதற்கான எவ்வித எண்ணமும் இல்லை என, இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்கார திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.


பாகிஸ்தானில் இம்ரான்கான் பிரதமராகியுள்ளது போன்று, இலங்கையில் குமார் சங்கக்கார அரசியலில் மிளிர்வார் என வெளியாகிவந்த செய்திகள் தொடர்பில் சகோதரமொழி ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இம்ரான் கான் கடந்த 20 ஆண்டுகளாக போராடி சிறந்த அரசியலை மேற்கொண்டு தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வாறானதொரு அரசியல்வாதியின் தேவைப்பாடே நாட்டிற்கு உள்ளது.

ஆனால், நான் வெறும் கிரிக்கெட் வீரர் மாத்திரமே. எனக்கு தற்போதும் சரி எதிர்காலத்திலும் சரி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலுக்குள் நுழைவதற்கான எதிர்பார்ப்பில்லை.

என்னை அரசியலுக்கு வருமாறு மக்கள் அழைப்பு விடுக்கவில்லை. சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களிலேயே இந்த தகவல் பரவியது.

இதனை கண்டுக்கொள்ளாது இருந்த போதிலும், இவ்விடயம் தொடர்பாக தற்போதைய அரசியல்வாதிகளும் கருத்துக்களை முன்வைக்க தொடங்கியதை அடுத்தே எனது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த தீர்மானித்தேன்” எனத் தெரிவித்தார்.