Mar 16

பாரிஸ் ஐ.எம்.எப். அலுவலகத்தில் குண்டு வெடிப்பு: ஒருவர் காயம்

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலகத்தில், தபாலில் அனுப்பப்பட்ட குண்டு வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கடித உரையைப் பிரித்த நாணய நிதியத்தின் ஊழியர் ஒருவரே சிறியளவில் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்திற்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகளை பிரெஞ்சு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலகக் கட்டடத்தில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கிரேக்கத்திலிருந்து வந்த தபால் பொதியே வெடித்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.