Sep 05

அமெரிக்க மாநிலங்களுக்கு எச்சரிக்கை!- அவசரகாலநிலை பிரகடனம்


அமெரிக்காவின் லூசியான மற்றும் மிசிசிப்பி ஆகிய மாநிலங்களில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கோர்டன் வெப்ப மண்டலச் சூறாவளி அமெரிக்க வளைக்குடா கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகின்ற நிலையிலேயே இந்த அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மணிக்கு 110 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும், கடும் மழைவீழ்ச்சியும் பதிவாகக்கூடும் தேசிய சூறாவளி மையம் எச்சரித்துள்ளது.

இதன் எதிரொலியாக கடலலைகள் 5 அடி வரை மேலெழுவதுடன், உயிராபத்துக்களை விளைவிக்கும் வல்லமை கொண்டது என்றும் தேசிய சூறாவளி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அலபாமாவின் தென்கிழக்கே சுமார் 70 மைல் தூரத்தில் மையம் கொண்டுள்ள கோர்டன் சூறாவளியானது, வடமேற்கு திசை நோக்கி மணிக்கு 15 மைல் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இச்சூறாவளியை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல் நியூ ஓர்லியன் தேசிய வானிலை மையம் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

லூசியானாவில் உள்ள மிகப்பெரிய நகரான நியூ ஓர்லியன்ஸ், இதற்கு முன்னர் கடந்த 2005ஆம் ஏற்பட்ட பாரிய சூறாவளியினாலும் பேரழிவுகளை எதிர்நோக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.