Sep 05

சர்வதேச நாடுகளின் தூக்கத்தைக் கெடுத்த ஜு கியு சாங் காலமானார்!

அமெரிக்காவின் மாத்திரமன்றி, சர்வதேச நாடுகளின் தூக்கத்தைக் கெடுத்த, வடகொரியாவின் முன்னாள் இராணுவ அமைச்சரும், சிரேஷ்ட அணுவாயுத நிபுணருமான ஜு கியு சாங் உயிரிழந்துள்ளார்.


வடகொரியாவின் முன்னாள் இராணுவ அமைச்சர் ஜு கியு சாங், பேன்சைட்டபீனியா (pancytopenia) என்னும் இரத்தத்தில் அணுக்களின் சமச்சீரின்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 89 ஆவது வயதில் காலமானார்.

சிறந்த கல்வியாளரும், பேராசிரியருமான அவரது மறைவுக்கு வடகொரியா அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் முன்னாள் இராணுவ அமைச்சர் ஜு கியு சாங் கடந்த 2009 ஆம் ஆண்டில் நெடுந்தூரம் சென்று தாக்கும் உன்ஹா-2, உன்ஹா-3 ஆகிய அதிநவீன ரொகட்களை தயாரித்து சர்வதேச நாடுகளை வியப்பிற்குள்ளாக்கினார்.

பின்னர், அதிநவீன அணு ஆயுதங்கள் மற்றும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டத்தை ஆரம்பித்து அதற்கான பணிகளை ஊக்குவித்தார்.

இவரது செற்பாடுகள் சர்வதேசத்தை அச்சுறுத்த கடந்த 2013 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட தனிநபர்களில் ஒருவராக விளங்கிய இவர், 2015 ஆம் ஆண்டு அமைச்சுப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

வடகொரிய தலைவரின் மிக நெருக்கமான இவர், வடகொரியாவின் அனுவாயுத சோதனைகளின் மூளையாக விளங்கியமையும் குறிப்பிடத்தக்கது.