Sep 05

கிரிமியாவில் காற்று மாசுபாடு காரணமாக தொழிற்சாலை மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டன

கிரிமியாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களும், தொழிற்சாலை ஊழியர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.


கிரிமியாவின் முக்கிய நகரான ஆமியான்ஸ்கில் வளிமண்டலத்தில் பரவியுள்ள அபாயகரமான சல்பர் டையொக்ஸைட் வாயு காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடக்கம் அங்கு பெருமளவில் வளிமாசு ஏற்பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய பின்புலமுள்ள கிரிமியாவின் பிரதமர் செர்ஜி அக்‌ஷியோனோவ் இதுபற்றி கூறுகையில், உள்ளூர் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது காற்றில் கலந்துள்ள நச்சு வாயு, உரிய அளவை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆமியான்ஸ்கில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், உள்ளூர் தொழிற்சாலை ஒன்றில் உணவு நிறமூட்டி மற்றும் நிறப்பூச்சுக்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் டைட்டானியம் டையொக்‌ஸைட் அதிகளவில் காற்றில் கசிந்திருக்கலாம் என்று சந்தேகம் வௌியிட்டுள்ளார்.

இதன்காரணமாக, பொது ஸ்தானங்கள் எதிர்வரும் 2 வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இருந்த போதும், காற்றில் கலந்த உயர் செறிவு மிக்க சல்பர் டையொக்ஸைட் தொழிற்சாலை உற்பத்திகள் காரணமாகவே வௌியானதா என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை.

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி தொடக்கம் துர்மணம் மற்றும் துரு நிறத்திலான ஒட்டும் பொருள்கள் தமது உடைமைகள் மீது படிந்ததாக பிரதேசவாசிகள் முறையிட்டுள்ளனர்.

கருங்கடல் தீபகற்பமான கிரிமியா, கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரேனிடமிருந்து ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.