Sep 04

கிறிஸ்தவரா சீமான்? தமிழரா அர்ஜுன் சம்பத்?.. மோதும் நாம் தமிழர் - இந்து மக்கள் கட்சி.!

தமிழர்களின் பண்பாட்டு தொன்மங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி தமிழர்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாக தங்களை அறிவித்துக்கொண்டுள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.


சில தினங்களுக்கு முன்னதாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அர்ஜுன் சம்பத், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு கிறிஸ்தவர் எனவும், அவர் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள வியனரசு, "சீமான் கிறிஸ்தவர் என கூறுவது பொய்யான தகவல். அவர் இந்து, கிறிஸ்தவம் போன்ற மதங்களை எதிர்ப்பவர். தமிழர்களுக்கான மதம் சைவ மதம். அதைத் தான் அவர் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருகிறார். தமிழர்களுக்கான மரபு வழி வழிபாட்டு முறைகளை ஏற்ற, முருகனையும், கிருஷ்ணனையும் முப்பாட்டன் என அறிவித்துள்ளார்.

ஆனால், அர்ஜுன் சம்பத் தமிழர் அல்ல. வீட்டிலும், வெளியிலும் தமிழை ஏற்றுக் கொண்டவர்களைத்தான் தான் தமிழர் என்று ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், அந்த வகையில் பார்த்தால் அர்ஜுன் சம்பத் தமிழர் அல்ல. அவர் எங்களைப் பற்றி பேச தகுதி இல்லை" என்று விமர்சித்துள்ளார்.