Sep 04

55 அணிகள் பங்கேற்கும் யு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக் தொடர்!

உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கு பின்னர், மீண்டும் இரசிர்களை குதுகலப்படுத்த தயாராகிவிட்டது யு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக் தொடர்.

அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த இந்த தொடர், ஆரம்ப போட்டியிலேயே இரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கவுள்ளது.

ஆம்! யு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக் தொடரின் ஆரம்ப போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி கால்பந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதற்காக தற்போது பிரான்ஸ் கால்பந்து அணி, தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.  வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபடுவதை காண ஆவலுடன் படையெடுத்திருந்த இரசிர்கள், வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபடுவதை கண் சிமிடடாது, இரசித்து மகிழ்ந்தனர். அத்தோடு வீரர்களோடு செல்பி எடுத்துக்கொண்டனர்.

உலகக்கிண்ண தொடருக்கு பின்னர், தேசிய கால்பந்து அணிகள் மோதும் தொடர் என்பதால், யு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக் தொடர் அனைவரினதும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நடப்பு உலகக்கிண்ண சம்பியனான பிரான்ஸ் அணி, அணித்தலைவரும், கோல்காப்பாளருமான ஹ்யூகோ லொரிரிஸ் இல்லாமல் ஜேர்மனி அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இது இரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்தாலும், அதனை ஈடுசெய்ய பிரான்ஸ் கால்பந்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஹ்யூகோ லொரிரிஸ், உபாதையில் பாதிக்கப்பட்டுள்ளதால். அவருக்கு பதிலாக பெஞ்சமின் லேக்கோட் கோல்காப்பாளராக செயற்படுவார் என பிரான்ஸ் பயிற்சியாளர் டிடியர் டெஸ்ஹாம்ப்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில், பிராண்ஸ் அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் குரேஷியா அணியை தோற்கடித்து மகுடம் சூடியது. இந்த உத்வேகத்துடன் தற்போது ஜேர்மனி அணியை எதிர்கொள்ளவுள்ளது.

பிரென்ட்லி இண்டர்நேஷனல் கால்பந்து தொடருக்கு பதிலாக புதுஉருவம் பெற்றுள்ள யு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக் தொடர், எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இந்த தொடரில் சுமார் 55 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் எதிர்வரும் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.