Jun 09

மறைந்த அமரர் ஆசிரியர் சிவப்பிரகாசம் ஒரு ஆளுமைமிக்க பத்திரிகையாளர் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் புகழாரம்

கடந்த ஞாயிற்றுக் கிழமை  கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் மறைந்த வீரகேசரி நாளேட்டின் முன்னாள் பிரதம ஆசிரியர் அமரர் கந்தசாமி சிவப்பிரகாசம் அவர்களுக்கு  ஒரு நினைவு அஞ்சலி நி்கழ்ச்சி நடத்தியது.

கடந்த சிலமாதங்களாக சுகவீனமுற்றிருந்த அவர் சென்ற ஏப்ரில் 14 அன்று தனது அகவை 83 இல் இயற்கை எய்தினார். 1983 இல் கொழும்பில் நடந்த இனக் கலவரத்திலும் பாதிப்புக்குள்ளாகியிருந்தார். அதன் பின் தமது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தார். அங்கு நீண்ட காலம் பொஸ்ரன் மாநிலத்தில் வசித்து வந்தார். அவருடைய துணைவியாரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகிவிட்டார். பிரதீபா, சஞ்சீவன் ஆகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசத்துக்கு இரண்டு பேரக்குழந்தைகள் உள்ளனர்.


அக்காலத்தில் திரு.கே.வி.எஸ்.வாஸ் வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஆசிரியப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் திரு. சிவப்பிரகாசம் அவர்கள் அவரது இடத்தில் பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அந்தப் பொறுப்பினை திறம்பட நடாத்தி வந்தார்.

இலங்கையில் இருந்து வெளிவந்த தமிழ் பத்திரிகைகளில் வீரகேசரி முதல் இடத்தைப் பிடித்த நாளேடு என்ற பெயரினையும், புகழையும் பெற்றது. அத்துடன் மித்திரன் என்ற மாலை வெளியீட்டினையும் தொடங்கினார். அந்த வெளியீடு இன்று வரை தொடர்ந்து நிலைத்து நிற்கின்றது.

1975 ஆம் ஆண்டு இறுதியில் சோவியத் நாட்டுக்குச் சென்று சுற்றுப் பயணம் மேற்கொண்டு திரும்பிய திரு சிவப்பிரகாசம் தமது பயண அனுபவங்களை வீரகேசரி வாரவெளியீட்டில் 12 வாரங்கள் பகிர்ந்து கொண்டார். இந்தப்பயணக் கதை பின்னர் சிரித்தன செம்மலர்கள் என்ற பெயரில் 1976 யூலையில் வீரகேசரி வெளியீடாக வெளியானது. இனக்கலவரகாலத்தில் தமது அனுபவங்களையும் ஆங்கிலத்தில் நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார். 

1966 ஆம் ஆண்டு வீரகேசரியில் இணைந்த சில மாதங்களிலேயே மாலை நாளேடாக மித்திரனை திரு  சிவப்பிரகாசம் அறிமுகப் படுத்தினார். அடுத்தடுத்து ஜோதி, நவீன விஞ்ஞானி முதலான இதழ்களையும் அறிமுகப்படுத்தினார். தமது இதழியல் பணிகளுக்கு மத்தியில் சட்டக் கல்லூரிக்கும் சென்று சட்டம் பயின்று சட்டத்தரணியானார்.

வரவேற்புரை ஆற்றிய வதனி அன்ரன் "தாய் மண்ணில் வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் நிர்வாக மேலாளர் பதவி வகித்து  தாய் மண்ணுக்கும் தமிழுக்கும் மாதகல் மண்ணுக்கும் பெருமை  சேர்த்து அமரராகிவிட்ட  எங்கள் சிவப்பிரகாசம் ஐயா அவர்களுக்கு இந்த நினைவு வணக்க அஞ்சலி செலுத்துவதில் கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் பெருமையடைகிறது. ஐயாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது" எனக் குறிப்பிட்டார்.

மேலும் பேசுகையில் "ஐயாவின் நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் ஐயாவின் வாழ்வும் வரலாறும் பற்றி எங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கும் பெரியோர்களையும் சிறப்பாக ஐயாவின்  ஆத்ம சாந்திக்காக பஜனை வழிபாட்டினை வழங்க இருக்கும்  கலைமாமணி  மனோரஞ்சிதம் நித்தியானந்தன் அவர்களையும்  அவரது மாணவிகளையும் அத்தோடு ஐயாவுக்கு இதய அஞ்சலியைச் செலுத்த வந்திருக்கும் மாதகல் உறவுகளையும் வருக வருக  என வரவேற்கிறேன்" என்றார். 

தகவல் ஆசிரியர் திரு திருச்செல்வம் பேசும்போது ஒரு காலத்தில் கொழும்பு தமிழ் ஊடகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்தார்கள். வீரகேசரியில் திரு சிவப்பிரகாசம் அவர்கள், தினகரனில் எனது குருநாதரான திரு சிவகுருநாதன் அவர்கள் சுதந்திரன் பத்திரிகையின் மூத்த ஆசிரியரான திரு சிவநாயகம் ஆகியோரே அந்த மூவேந்தர்கள் ஆவர். இவர்களை நான் சந்தித்தபோது  ஒரேயொருவர் மட்டுமே  "நீர் கொழும்புக்கு வந்து ஒரு பத்திரிகையில் ஏன் பணியாற்றக் கூடாது" எனக் கேட்டார். அந்த ஒரேயொருவர் திரு  சிவப்பிரகாசம் அவர்கள்.

.திரு சிவப்பிரகாசம் அவர்களும் திரு சிவகுருநாதனும் சமகாலத்தில் பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் படித்து ஒன்றாக வெளியேறியவர்கள்.  அதுமட்டுமல் இந்த இருவரும் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் பள்ளியில் படித்த மாணவர்கள். அதன் காரணமாக தினகரன் ஆசிரியர் திரு சிவகுருநாதனுக்கும்  வீரகேசரி ஆசிரியர் திரு சிவப்பிரகாசம் அவர்களும் கலந்து உறவாடி ஒற்றுமையாகச் செயற்பட்டார்கள்.

தினகரனின் விற்பனை விழுந்து கொண்டு செல்வதை சரிக்கட்ட  வீரகேசரி பத்திரிகையை டெஸ்மன்ட் விக்கிரமசிங்கி (இன்றைய பிரதமர் இரணில் விக்கிரமசிங்கியின் தந்தை) வாங்கி அதற்கு திரு சிவப்பிரகாசம் அவர்களை இணை ஆசிரியராக நியமித்தார்.  

பின்னர் வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியராக நியமித்தார். இதன் முக்கியம் என்னவென்றால் வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியராக  முதன்முறையாக ஒரு இலங்கைத் தமிழர்  நியமிக்கப்பட்ட  பெருமை உங்கள் மண்ணின் மைந்தராகிய சிவப்பிரகாசம் அவர்களைச் சேரும்.

நக்கீரன் தங்கவேலு பேசும் போது "இந்த உலகில் பிறந்தவர்கள் ஒருநாள் இறக்கவே செய்வார்கள். இந்த விதிக்கு யாரும் விலக்கில்லை. ஆனால் வாழும் போது மற்றவர்களுக்கு கொடுத்து –பகுத்துண்டு - புகழோடு வாழ வேண்டும் என்கிறார் வள்ளுவர். மறுபிறப்பில் நம்பிக்கை வைத்திருப்போர் கூட அது மனிதப் பிறப்பாக இருக்கும் என்பது நிச்சயமில்லை.

எல்லாப் பிறப்புக்களிலும் மனிதப் பிறப்பே  அரிதானது. ஔவையார் அரிது  அரிது மானிடராகப் பிறத்தல் அரிது என்கிறார். எனவே மனிதராய் பிறந்த நாம் இந்த உலகில் நீண்ட நாள் வாழ வேண்டும். அதற்கான உபாயங்களை சித்தர்களும் முத்தர்களும் சொல்லித் தந்துள்ளார்கள்.

திருமூலர் ஒரு வித்தியாசமான சித்தர். மற்றச் சித்தர்கள் காயமே இது பொய்யடா காற்றடைந்த பையடா என்று பாடி வைத்திருப்பதற்கு மாறாக  ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம், வள்ளல் பிரானுக்கு   வாய் கோபுரவாயில்,  தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம், கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே' எனப் பாடியுள்ளார்.  ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயில்கள் மனித உருவில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.

திருவள்ளுவர் தாம் எழுதிய திருக்குறளில் மருந்து என்ற ஒரு அதிகாரத்தை எழுதியுள்ளார். அதில் நாம் நோயின்றி நீண்ட நாள் வாழ்வதற்கான உபாயங்களை சொல்லியிருக்கிறார்.

‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது  போற்றி உண்ணின்’ என்பது ஒரு குறள்.  அதாவது முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப் பிறகு தக்க அளவோடு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்றும் வேண்டியதில்லை’ என்கிறார். இப்படி பத்துக் குறள்களில் நோய் நொடியில்லாத நீண்ட நல்வாழ்வுக்குரிய அறிவுரைகளைச்  சொல்கிறார்.  அதனை எல்லோரும் படிக்க வேண்டும். பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அமரர் சிவப்பிரகாசம் அவர்களது இருமொழிப் புலமை, ஆளுமைபற்றி திரு து. சிவப்பிரகாசம், முன்னாள் வீரகேசரி ஆசிரியர் சிவநேசச்செல்வன், செந்தாமரை வார ஏட்டின் ஆசிரியை ராஜி அரசரத்தினம்  ஆகியோர் உரையாற்றினார்கள். பிரதீபன் நன்றியுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியை திரு வீரசுப்ரமணியம் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.