Sep 04

தென்னாபிரிக்கா ஆயுதக் கிடக்கில் வெடிப்பு: எட்டு பேர் உயிரிழப்பு


தென்னாபிரிக்காவின்- கேப்டவுனுக்கு அருகிலுள்ள ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்புச் சம்பவத்திற்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கிடங்கின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தீயணைப்பு படையினரும், மீட்புப் பணியாளர்களும் தொடர்ந்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேப்டவுனுக்கு அருகில் சமர்செட் மேற்கு மாவட்டத்திலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. சுமார் 5 கிலோமீற்றர் தொலைவில் தீப்பந்து போன்ற ஒன்று தோன்றியதாக சம்பவத்தை நேரில் கண்ட பிரதேசவாசியொருவர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி மற்றும் தென்னாபிரிக்க கூட்டு நிறுவனங்களுக்கு சொந்தமான ரேய்ன்மெடால் – டேனல் தொழிற்கூடத்தில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் உள்நாட்டு ராணுவத்திற்கும், பொலிஸாருக்கும், வௌிநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றன.