Sep 03

பிரான்ஸ் பாரம்பரிய சந்தையில் குவிக்கப்பட்ட 500 தொன் சிப்பியோடுகள்!

பிரான்ஸின் வரலாற்று மையமான லில்லியில் வருடாந்தம் இடம்பெறும் உணவு சந்தைக்கு இந்த வருடம் சுமார் 2 மில்லியன் வாடிக்கையாளர்கள் படையெடுத்தனர். அங்கு விநியோகிக்கப்பட்ட மசில் எனப்படும் ஒருவகை கடல் சிப்பி உணவு, வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

அவர்களால் கொள்வனவு செய்யப்பட்ட கடல் சிப்பி உணவின் கழிவுகளாக அகற்றப்படும் சிப்பியோடுகள் மாத்திரம் சுமார் 500 தொன் அளவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் இடம்பெறும் மிகப் பெரிய உணவுச் சந்தையாக இது கருதப்படுகிறது.

நகரத்துக்கு மத்தியில் சுமார் 1,235 ஏக்கர் நிலப்பரப்பில் இடம்பெறும் சந்தை வியாபாரத்தை வாடிக்கையாளர்களும், ஏற்பாட்டாளர்களும் ஒரு விழாப் போன்று கொண்டாடுகின்றனர்.

இதன்போது, சுமார் 90 கிலோமீற்றர்கள் வரை வியாபார கூடாரங்கள் அமைக்கப்பட்டு பலவிதமாக சமைக்கப்பட்ட உணவுப்பொருட்களும், உலர் உணவுப் பண்டங்களும், வேறு வகையான பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன் moules frites போன்ற நானாவித பாரம்பரிய பொருட்களும் இங்கு இடம்பிடிக்கின்றன.

பிரான்ஸின் லில்லி பாரம்பரிய சந்தையின் வரலாறு 12ஆம் நூற்றாண்டு வரை நீண்டு செல்கின்றது. எனினும், மசில்ஸ் சிப்பி உணவுகள் மிக அண்மைக்காலமாகவே உணவுச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.

கடந்த 1950ஆம் ஆண்டு வரை கோழிப் பண்ணை வியாபாரம் பாரம்பரிய சந்தையில் பெரிதும் இடம்பிடித்திருந்தது. எனினும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நோய்த் தொற்றுகள் காரணமாக அவற்றின் பங்கு வெகுவாக குறைந்துள்ளது.

பல வருடங்களால் சந்தைக்கு கொண்டுவரப்படாத கடல் சிப்பி உணவுகள் இந்தவருடம் பெரிதும் வரவேற்பை பெற்றிருந்ததுடன், காலியான சிப்பியோடுகள் நகரத்தில் மத்தியில் குவிக்கப்பட்டன. சிப்பி கழிவுகளை கொண்டு லில்லியைத் தளமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்று தரை மற்றும் சுவர் ஓடுகளை தயாரிக்கின்றது.

செப்டெம்பர் மாதத்தின் முதல் வாரயிறுதியில் நடைபெறும் பாரம்பரிய உணவு சந்தை, கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற ட்ரக் தாக்குதலின் பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.