Sep 03

இணையம் வழியாக சிறுவர் துஷ்பிரயோகம்! – உட்துறை அமைச்சர் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களின் ஊடாக சிறுவர்களுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தொல்லைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக பிரித்தானிய உட்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவில் சிறுவர்கள் மீது பாலியல் ஈர்ப்பு கொண்ட மனநோயினை உடைய 80,000 வரையானவர்கள் இணையம், சமூக வலைத்தளங்களின் ஊடாக சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தேசிய குற்றங்கள்சார் அமையம் தெரிவித்துள்ளது.

குறித்த தகவலைக் அறிந்து அதிர்ச்சியுற்ற பிரித்தானிய உட்துறை அமைச்சர் சாஜித் ஜாவித், விஷேட செயற்திட்டப்பணியினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும், இணையத்தின் ஊடாக சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வருவதற்கான ஆதாரங்கள் மற்றும் தெளிவற்ற ஒளிப்படங்கள் என்பவை அந்நாட்டுத் தேசிய குற்றவியல் அமையத்தில் காணப்படுவதாகவும் ஜாவித் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்கள், குழந்தைகள் மீது பாலியல் ஈர்ப்பு கொண்ட மனநோயாளிகள், 10 வயதுக்கு குறைந்தவர்களையே  அதிகம் குறிவைப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது காணப்படும் இணைய, சமூக வலைத்தள வசதிகள் மற்றும் உடனுக்குடன் பணத்தினை அனுப்பி, பெறக்கூடிய வசதிகளினால் பாலியல் அச்சுறுத்தல் சம்பவங்களும் துஷ்பிரயோகங்களும் இடம்பெறுகின்றன. மேலும் நவீன தொழிநுட்பத்தின் வளர்ச்சி வேகத்தில் துஷ்பிரயோகக் குற்றங்களும் வேகமாக அதிகரிப்பதாக பிரித்தானிய உட்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கிலாந்து, வேல்ஸ் பிராந்தியங்களில் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நாளொன்றிற்கு 23 சிறுவர் துஷ்பிரயோகங்கள் இணையம் வழியே இடம்பெறுவதாக அந்நாட்டு பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.