Sep 03

ரொயிட்டர்ஸ் ஊடகவியலாளர்களுக்கு 7 வருட கடூழிய சிறை! – HRW கடும் கண்டனம்

ரொயிட்டர்ஸ் சர்வதேச ஊடக நிறுவனத்தின் இரு ஊடகவியலாளர்களுக்கு 7 வருட கடுங்காவல் தண்டனை வழங்கி மியன்மாரின் யன்கோன் மாவட்ட நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பளித்துள்ளது.

கடந்த இரண்டு வருட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குறித்த ஊடகவியலாளர்களுக்கு இன்று இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பு சர்வதேச மட்டத்தில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளதோடு, ஊடகம்  மற்றும் மனித உரிமைசார் அமைப்புகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

ஊடகத்துறையின் சுதந்திரத்தை மியன்மார் அரசாங்கம் மதிக்க வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

வுவா வோன் (வயது-32), கியாவ் சொயி ஓ (வயது-28) ஆகிய இருவருக்கும் சிறைத்தண்டணையை வழங்குமாறு அந்நாட்டு அரசாங்கம் இரகசியமாக நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து நீதிமன்றம் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய கண்டத்திற்கான துணைத் தலைவர் ஃபில் ரொபட்சன் குறிப்பிட்டுள்ளார்.

காலனித்துவ ஆட்சிக்காலத்தில் காணப்பட்ட அரச இரகசியச் சட்டங்களைக் தேடிக்கண்டறிந்து வெளியிட்டதுடன் அரசாங்கத்தின் இரகசியக் குறிப்புக்கள், ஆவணங்களை சேகரித்து வெளியிட முயற்சித்ததாக இவர்கள் மீது மாவட்ட நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.

குறித்த இரு ஊடகவியலாளர்களும் அனைத்து இரகசியத் தகவல்களையும் சேகரித்துக் கொண்டு யன்கோனின் வடக்கிலுள்ள உணவகமொன்றில் கையளிக்க திட்டமிட்டு அங்கு சென்ற வேளையில், அந்நாட்டுப் பொலிஸாரினால் கையும் களவுமாகப் பிடிபட்டனர். மேலும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டு படையினர் செயற்பட்டமை தொடர்பான தகவல்களையும்  குறித்த ஊடகவியலாளர்கள் சேகரித்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

எவ்வாறெனினும், குறித்த ஊடகவியலாளர்களின் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் விசாரணை தொடர்பாக மியன்மார் அரசாங்கம் உரிய விளக்கத்தினை வழங்க வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது