Sep 03

தமிழ்நாட்டின் முன்னணி நடன கலைஞர்களின் செயலமர்வு யாழில்

தமிழ் நாட்டிலிருந்து வருகை தரும் முன்னணி நடன கலைஞர்கள் நடத்தும் செயலமர்வில் வடக்கில் உள்ள நடன ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் ஊடக சந்திப்பு அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கலாச்சார பிரிவும்  ,இந்திய துணைத் தூதரகமும் ,இணைந்து 'தெய்வீக சுகானுபவம்" என்ற தொணிப்பொருளில் கலை நிகழ்வுகளை நடத்தி வருகிறோம். 

இந்த நிகழ்வின் ஊடாக எமது கலை ஆற்றல்களை பரிமாற்றம் செய்துகொள்ள கூடியதாக இருப்பதுடன்,  தமிழ் நாட்டில் உள்ள சிறந்த கலைஞர்களை அறிமுகப்படுத்தி அவர்கள் ஊடாக எமது மாணவர்கள் ஆசியரியர்கள் கூடிய பயனை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். 

அந்த வகையில் இம்முறை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டத்தில் இந்த நடன கலைஞர்களின் ஆற்றுகை மற்றும் செயலமர்வை நடத்த திட்டமிட்டுள்ளோம்.  இம்முறை தமிழ் நாட்டிலிருந்து திருமதி சத்தியநாராஜணன் குழவினர் வருகை தருகிறார்கள். இந்த நடனக்குழுவினர் நாளை  4 ஆம் திகதி  காலை 9 மணிக்கு கைலாசபதி கலையரங்கில் செயலமர்வினை நடாத்தவுள்ளனர். 

நாளை மறுதினம் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு சங்கிலியன் பூங்காவில் அவர்களின் நடன ஆற்றுகை நடைபெறவுள்ளது. தெய்வீக ஆற்றுகையாக அமையவுள்ளது. எதிர்வரும் 6 ஆம் திகதி காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் பயிற்சி பட்டறை நடைபெறவுள்ளது. பி.ப 4 மணிக்கு நடன ஆற்றுகையும் அதே இடத்தில் நடைபெறுவுள்ளது. 

ஆகவே இவ்வாறான சிறந்த கலைஞர்களுடைய  ஆற்றலை எமது மாணவர்களும் ஆசிரியர்களும் பெறக்கூடியவகையில் பயிற்சிப்பட்டறை நடத்தப்படவுள்ளது. அந்தவகையில் இச்செயலமர்வு, ஆற்றுகை மூலம் பல விடயங்களை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள ஆசிரியார்கள் மாணவர்கள் பல்கலை மாணவர்கள்  கலந்து கொண்டு பயனைபெற  வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.