Sep 03

மத்தியத்தரைக் கடல் வழியாக பயணிக்கும் அகதிகளில் 18 பேரில் ஒருவர் உயிரிழப்பு! ஐ.நா கணிப்பீடு

மத்தியத்தரைக் கடல் வழியாக இந்த வருட ஆரம்பம் தொடக்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சித்த, சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களில் 18 பேரில் ஒருவர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவரகம் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.

மத்தியதரைக் கடற்பிராந்தியத்திற்கான முகவரகத்தின் விசேட பிரதிநிதி வின்சென்ட் கொச்செடெல் இதுபற்றி ரொய்ட்டருக்கு அளித்துள்ள செவ்வியில், சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை குறைந்து கொண்டிருப்பதால், புள்ளிவிவரங்கள் முரண்பாடாக இருந்தாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடத்தல்காரர்கள் பெருமளவான மற்றும் அதிக அபாயங்களை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டதால் இறப்பு விகிதம் அதிகரித்தது. இதன்படி, ஏறத்தாழ 1,600 பேர் வரை இந்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரை உயிரிழந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட் வரை சுமார் 130,140 பேர் மத்தியதரைக் கடல்வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ள நிலையில் 2,400 பேர் வரை பல்வேறு காரணங்களால் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவரகம் கணிப்பிட்டுள்ளது.

இந்த வருடம் அதே காலப்பகுதியில் 68,000 அகதிகள் வருகை தந்துள்ளதாகவும் அவர்களில் 1600 பேர் கடல் பயணத்தின் போது பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.