Sep 03

கொள்ளையனை துரத்திக்கொண்டு சுவிசில் இருந்து பிரான்சுக்குள் நுழைந்த பெண் காவல்துறை அதிகாரி!

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் சுவிஸ் நாட்டில் இருந்து கொள்ளையன் ஒருவனை துரத்திக்கொண்டு பிரான்சுக்குள் நுழைந்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, 4 மணி அளவில், சுவிஸ் பெண் காவல்துறை அதிகாரி  ஒருவர் அந்நாட்டு எல்லையில் மகிழுந்து ஒன்றை துரத்திக்கொண்டு வந்துள்ளார். துரத்தப்பட்ட மகிழுந்து பிரான்சில் திருடப்பட்ட மகிழுந்து என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தப்பியோடிய கொள்ளையர்கள் நேரே பிரெஞ்சு எல்லைக்குள் நுழைந்தனர். விடாமல் துரத்திக்கொண்டு வந்த காவல்துறை அதிகாரியை Thoiry (Ain) நகரில் வைத்து இடித்து தள்ளியுள்ளனர்.தங்களது மகிழுந்தால், காவல்துறை அதிகாரியின் மகிழுந்தை மோதி தள்ளியுள்ளனர்.

இதனால் அதிகாரியின் மகிழுந்து விபத்துக்குள்ளாகி, காயமேற்பட்டது. உடனடியாக அதிகாரி உலங்குவானூர்தி மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, ஜெனீவாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.