Sep 03

ரொறன்ரோ நகர முதல்வரை யாழிற்கு வருமாறு அழைப்பு

ரொறன்ரோ நகர முதல்வர் ரோறியினை யாழ்ப்பாணத்துக்கு வருகை தருமாறு யாழ்.நகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட்டிற்கும், ரொறன்ரோ நகர முதல்வர் ரோரிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த 28 ஆம் திகதி ரொறன்ரோ நகர மண்டபத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முதல்வர் ஆனல்ட் யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக இடம் பெறும் மீள்கட்டுமான முயற்சிகள் தொடர்பில் முதல்வர் ரோறிக்கு விளக்கமளித்துள்ளார்.

அறிவுப் பரிமாற்றம், கழிவு முகாமைத்துவம் மற்றும் பயிற்சி வசதிகள் தொடர்பாக முதல்வர் ரோறியின் உதவியை முதல்வர் ஆனல்ட் கோரியிருந்தார்.

அத்துடன், முதல்வர் ரோறி, அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்துக்குச் வந்ததைப் பற்றி எடுத்துரைத்ததுடன் நீண்ட போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மீள்கட்டியெழுப்ப உதவும் தனது ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

ரொறன்ரோ நகரம் என்னென்ன வழிகளில் யாழ்ப்பாண நகரத்துக்கு உதவ முடியும் என்பதையிட்டுக் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இதேவேளை, இந்த சந்திப்பில் ரொறன்ரோ மாநகர சபை உறுப்பினர் நீதன் சாண், கனேடிய தமிழர் பேரவையின் நிறைவேற்று இயக்குநர் டான்ரன் துரைராசா மற்றும் கனேடிய தமிழர் பேரவையின் வடக்கு கிழக்கு மேம்பாட்டு திட்டத்தின் பொறுப்பாளர் பிரசாந்த் ஸ்ரீசந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.