Jun 08

பிரித்தானிய பொதுத் தேர்தலில் பெருமளவு மக்கள் வாக்களிப்பு

பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு  வியாழக்கிழமை ஆரம்பமானது. தேர்தலையொட்டி  அந்நாடெங்கும் 40,000  க்கு மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

 பிரித்தானிய நேரப்படி காலை 7:00  மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு  இரவு 10:00  மணிக்கு நிறைவுபெற்றது.

இந்தத் தேர்தல் மூலம்  அந்நாட்டுப்  பாராளுமன்றத்துக்கான மொத்தம் 650  பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

 பிரித்தானியாவில் அண்மையில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களைக் கருத்திற் கொண்டு அந்நாட்டு வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதேசமயம் சில பிராந்தியங்களில் ஆயுதப் படையினர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தத் தேர்தலில் வாக்களிக்க 46.9  மில்லியன் பேர் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  இதற்கு முன் 2015  ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது 46.4 மில்லியன் பேர்  வாக்காளர்களாக பதிவுசெய்திருந்தனர்.

 தபால் மூல வாக்காளர்கள் ஏற்கனவே தமது வாக்குகளை அளித்திருந்தனர். அத்துடன் இதுவரை சமர்ப்பிக்கப்படாத  தபால் மூல வாக்குகளை உள்ளூர் வாக்களிப்பு  நிலையங்களில் கையளிக்க வசதி செய்துதரப்பட்டுள்ளது.

2015  ஆம் ஆண்டு தேர்தலில் பிரித்தானிய பழைமைவாதக் கட்சியினர் 650  ஆசனங்களில் 331  ஆசனங்களை வென்றெடுத்திரு்ந்தனர். இது 2010  ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் 66.4  சதவீதம் அதிகமாகும்.

 பல வாக்களிப்பு நிலையங்கள் பாடசாலைகள்,  சனசமூக நிலையங்கள் மற்றும்  தேவாலய மண்டபங்களில் அமைக்கப்பட்டிருந்தன.. ஆனால் கடந்த காலத்தில் மதுபான நிலையங்கள், , சலவை நிலையமொன்று மற்றும்  பாடசாலை பஸ்ஸொன்று என்பவற்றில்  வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தல் தொடர்பான பெறுபேறுகள் முழுமையாக இன்று  வெள்ளிக்கிழமை  பிற்பகலுக்குள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலின் போது   வழமையாக இடம்பெறுவது போன்று  உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் எதுவும் இடம்பெறாததால் தேர்தல்  பெறுபேறுகள்  அண்மைய பொதுத் தேர்தல்களை விடவும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதற்கான  பிறிக்ஸிட் நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இடம்பெறும் இந்தத் தேர்தல்  அதனைக் குறிக்கும் வகையில் பிறிக்ஸிட் தேர்தல்  என செல்லமாக அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில்   பிரதமர் தெரேஸா மேயின்  கட்சியான பழைமைவாதக் கட்சி (டோரி  கட்சி)  வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. எனினும்   அந்தக் கட்சியின் கொள்கை தொடர்பில் இடம்பெற்றுள்ள ஒரு தொடர் குழறுபடிகள் காரணமாக  அது ஏற்கனவே எதிர்வுகூறப்பட்டவாறு மாபெரும் வெற்றியைப் பெறுவது கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இந்தத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் அந்நாட்டில் லண்டன் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் பிராந்தியங்களில்  இடம்பெற்ற இரு தீவிரவாதத் தாக்குதல்களால் இடையூற்றை எதிர்கொள்ள நேர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கார்டியன் ஊடகத்திற்காக  நடத்தப்பட்ட பிந்திய கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பொன்று தெரேஸா மேயின் பழைமைவாதக் கட்சி 12  சதவீத வாக்குகளால் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கிறது. அந்த வாக்கெடுப்பில் பழைமைவாதக் கட்சி 46  சதவீத வாக்ககளையும் தொழிற் கட்சி 34  சதவீத வாக்குகளையும் தாராள ஜனநாயகக் கட்சி 7  சதவீத வாக்குகளையும்  யு.கே.ஐ.பி. கட்சி 5  சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.

இதற்கு முன் நடத்தப்பட்ட கருத்தக் கணிப்பு வாக்கெடுப்புகள்  மேற்படி தேர்தலானது தொங்கு பாராளுமன்றத்துக்கு வழிவகை செய்து  பிரித்தானிய  தொழிற் கட்சியின் தலைவர் ஜெரேமி கொர்பைன்   ஆட்சி அதிகாரத்தைக் கைபற்ற வழிவகை செய்யும் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பழைமைவாதக் கட்சியினர் தம்மை குறைத்து மதிப்பிட்டு வருவதாகவும் இந்தத் தேர்தலில் தமது கட்சியே வெற்றி பெறும் எனவும் கொர்பைன் தனது தேர்தல் பிரசாரங்களின் போது வலியுறுத்தி வந்திருந்தார்.

தெரேஸா மே தனது   6  வார கால தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான  நேற்று முன்தினம  புதன்கிழமை   தனது கணவருடன் 600  மைல் தூர பயணத்தை மேற்கொண்டு சவுதாம்டன், நோர்விச்,  நொட்டிங்ஹாம் பிராந்தியங்களில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“ நான்  எவரும் எந்த சமூகமும் பின்தள்ளப்படாத நாடொன்றை கட்டியெழுப்ப விரும்புகிறேன்"  என  தெரேஸா மே தெரிவித்தார்.

தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்று ஒரு வார காலத்திலும் குறைந்த காலப் பகுதியில்  இந்தத் தேர்தலை ஏற்கனவே திட்டமிட்ட திகதியில் நடத்துவதற்கு  தீர்மானம்  எடுத்தமை குறித்து தெரேஸா மே விபரிக்கையில், "நான் மக்கள் வாக்களிக்கச் செல்வதையே உண்மையில் விரும்புகிறேன். ஏனெனில் இங்கு நடைபெற்றவற்றால் எமது ஜனநாயகத்துக்கு முட்டுக்கட்டை போட முடியாது என்பதை காண்பிக்க நான் விரும்புகிறேன்"  என்று கூறினார்.