Jun 08

உன்னதமான ஆண் விடுதலைப் புலிகளோடு ஓர் இரவில் தனியாக இருந்தேன்! அனிதா பிரதாப்

இருபது ஆண் ” விடுதலைப் புலிகளோடு”ஓர் இரவில் தனியாக இருந்தேன், ஒரு நொடிப்பொழுது கூடபெண்பாதுகாப்பின்மையைநான்உணரவில்லை…!

தம்பிகளுக்கும், தனது ஒழுக்க நெறிகளை விதைத்தவர் தமிழீழத் தேசியத் தலைவர்மேதகு வே.பிரபாகரன். எந்த விதமானமாற்றுக் கருத்துக்களும் இடமின்றி சொல்கிறேன் உன்னதமான உயர்ந்த “போராளிகள்” விடுதலைப் புலிகள்!

அனிதா பிரதாப் (இந்தியா ஊடகவியளார்)

(உலகில் எங்கேனும் இது போன்ற ஓர் தலைசிறந்த இராணுவம் உண்டா!

இதற்கு மேலும் விடுதலைப் புலிகளை“தீவிரவாதிகள்” எனக் கூறுபவர்கள் மனித பிறப்பே கிடையாது…!)

விடுதலைப் புலிகள் இயக்கமும், அனிதா பிரதாப்பும்…

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

03-11-2015

வேறு சில பழைய கடிதங்களைத் தேடியபோது, பிரபல பத்திரிகையாளரும், நெருங்கிய நண்பருமான அனிதா பிரதாப் அவர்களின் கைப்பட எழுதிய கடிதம் கைக்குக் கிடைத்தது.

இந்த கடிதத்துக்குப் பின் பல செய்திகள் அடங்கியுள்ளன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் அவர்களுடைய முதல் பத்திரிகை பிரவேசமும், பேட்டி சம்பந்தமான கடிதம் தான் இது.

அனிதா பிரதாப் இந்தியன் எக்ஸ்பிரஸ், சண்டே, இந்தியா டுடே (ஆங்கிலம்), டெலிகிராஃப், டைம்ஸ் ஆகிய ஏடுகளில் பல்வேறு பொறுப்புகளில் செய்தி ஆசிரியர் மற்றும் சி.என்.என் தொலைக்காட்சியிலும் பணியாற்றிய ஒரு உலகமறிந்த சிறந்த பத்திரிகையாளர். இப்போது டெல்லியில் ஆறுமாதமும், டென்மார்க்கில் ஆறுமாதமும் வசிக்கின்றார்.

1981ல் இருந்து நெருங்கிய சகோதரியைப் போல் பழகியவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் அவர்களிடம் உலகில் முதன்முதலாகப் பேட்டிகண்ட பத்திரிகையாளர் இவர்தான். அந்த பேட்டி சண்டே ஆங்கில வார இதழில் வெளியிடப்பட்டது.

அனிதா அவர்கள் என்னிடம் தம்பி பிரபாகரன் அவர்களிடம் எனக்கு ஒரு பேட்டி வாங்கித்தாருங்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். தம்பி அவர்களோ எந்தப் பத்திரிகைக்கும் பேட்டிகள் வழங்கமுடியாது என்று தெளிவாகப் பலதடவை மறுத்தும், நானும் பேபி சுப்பிரமணியமும் தொடர்ந்து மூன்று மாதங்கள் வாதாடி, அனிதா பிரதாப் சண்டே இதழுக்காக பேட்டியை் வழங்க சம்மதத்தைப் பெற்றோம்.

தம்பி அவர்கள் கேள்விகளை ஆங்கிலத்தில் வாங்குங்கள். நாமும் அந்த கேள்விகளுக்கு எழுத்திலே பதில் கொடுப்போம் என்று ஒத்துக்கொண்டார். பேட்டிக்குப் பின் தம்பி அவர்களுடைய புகைப்படம் தேவையாக இருந்தபோது, அதற்காக அனிதா அவர்கள் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.

நானும் பேபி சுப்பிரமணியம் அவர்களும் அருகே இருந்த தம்பி, அனிதா ஆகியோர்களோடு புகைப்படங்களும் அப்போது எடுக்கப்பட்டன. அப்போது விடுதலைப்புலிகள் இயக்க ஆவணங்களை அனிதா பிரதாப்பிடம் கொடுத்திருந்தேன். அது வேண்டுமென்று கேட்டதற்குத் தான் இந்தக் கடிதத்தில், “தேடித் தருகிறேன்” என்று கைப்பட எழுதியுள்ளார். அந்த ஆவணங்கள் எங்கோ தவறிவிட பலமாதங்களுக்குப் பிறகுதான் திரும்பக் கொடுத்தார். ஆவணங்களைப் பெற்ற அவரிடமிருந்து அந்தப் புகைப்படங்களைப் பெறமுடியாமலே போனது.

ஈழத்தமிழர் பிரச்சனையில் தனி அக்கறை மட்டுமில்லாமல், அதைக்குறித்து ஆங்கிலத்தில் Island of Blood என்ற நூலும் எழுதியுள்ளார் அனிதா பிரதாப்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு எனக்கிருந்த தொடர்புகளையும், அவர்களுக்காக ஆற்றிய பணிகளையும் திட்டமிட்டு சிலர் மறைத்தாலும், அனிதா பிரதாப் போன்ற நண்பர்கள் இன்றைக்கும் சொல்லிக்கொண்டிருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல, இன்னும் மனசாட்சி உள்ள மானிடர்கள் பூமியில் இருக்கின்றார்கள் என்ற உண்மையும் புலப்படுகின்றது.

பேட்டியின் தமிழாக்கம் :

இலங்கையில் பரவலடைந்துள்ள வன்முறைகளின் முடிவு எங்கே என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

இலங்கையில் இன வன்முறை என்பது கொடிய வளைவுகளாக அதிகரித்துக்கொண்டே உள்ளன. ஒருகாலத்தில் வன்முறைகள் உச்சக்கட்டத்தில் காணப்படும். பின்னர், குறையும். பிறகு, மீண்டும் அதிகரிக்கும். இவை உடனடியாக முடிவுக்கு வரும் என்று எனக்குத் தெரியவில்லை. தற்போதுள்ள நிலையில் மாற்றம் ஏற்படுமானால், இன்னும் அதிகரிக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.

தற்போது தனக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுவதாக சிறிலங்கா அரசு கருதுகின்றது. அதனால், அது தனது நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதில் நாட்டமாகவுள்ளது.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக பலமிழக்கச்செய்வதன் மூலம் அவர்களை பேச்சு மேசைக்கு கொண்டு வரலாம் என்று சிறிலங்கா அரசு எண்ணுகிறது என்று நான் நினைக்கின்றேன். கடந்த அரசுகளும் இதேபோன்றுதான் செயற்பட்டன. ஆனால், அவர்கள் நினைத்தது போன்று நடக்கவில்லை.

“என்றாவது ஒருநாள் நான் இலங்கைக்குச் சென்று பிரபாகரனை சந்தித்து அவரது வாழ்க்கை வரலாறை எழுதவேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.”

அரசு இதனை மறுத்திருக்கின்றது. ஆனால், அது உண்மை என்றால், அரச தலைவரின் உலங்குவானூர்தி அணி மீதான தாக்குதல் பாரதூரமான விடயம். இந்த தாக்குதலானது, சிறிலங்கா அரசின் “இதயம்” வரை அண்மித்து தாக்குதல் நடத்தக்கூடிய சக்தியை விடுதலைப் புலிகள் கொண்டுள்ளார்கள் என்பதை காட்டியுள்ளது.

புலிகளின் இவ்வாறான தாக்குதல்களுக்கு பதிலளிப்பதானால், அவர்களை முறியடிக்கும் முயற்சியில் அரசு இன்னமும் கூடுதலாக செயற்பட வேண்டியிருக்கின்றது.

ஆனால், அவ்வாறான அரசின் பதில் நடவடிக்கையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால்- மக்கள் ஆதரவின் மூலம்- விடுதலைப் புலிகள் மட்டுமே பலம் பெற்றுக்கொள்வார்கள்.

இலங்கையில் நிலவும் தற்போதைய இராணுவ நிலைமை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலமிழந்து விட்டார்கள் என்று கருதுகின்றீர்களா?

ஆம். விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்ற கருத்துநிலை ஒன்று உள்ளது.

ஆனால், கடந்த காலத்தை எடுத்துக்கொண்டால், நிகழ்காலம் தமக்கு பாதகமாக அமையும்போதெல்லாம் புலிகள் தமது நடவடிக்கைகளை ‘அடக்கி வாசித்துள்ளார்கள்’.

ஆனால், அக்காலப்பகுதியில் அவர்கள் சோம்பல் முறித்துக்கொண்டோ- நேரத்தை வீணடித்துக்கொண்டோ இருப்பதில்லை.

அந்தவகையில், அவர்கள் தற்போது பெரும் தாக்குதலுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள். அதற்கு தம்மை ஒழுங்கமைத்துக்கொண்டிருக்கின்றார்கள். மீண்டும் எழுந்துவர தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள்.

பிரபாகரன் பொறுமையான மனிதர். அவர் நேரத்தை வீணடித்து நான் பார்த்ததே இல்லை. அவரது மூளை ஏதாவது ஒருவிடயத்தை நோக்கி எந்நேரமும் துடித்துக்கொண்டே இருக்கும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் மிகச்சிறந்ததொரு கெரில்லா அமைப்பு.

ஆனால், நாட்டின் வலிமை குறையும் நேரங்களில், விடுதலைப் புலிகள் மரபுவழி இராணுவமாக மாறி சமரிட்டார்கள்.

இந்த வழியை 1990 களின் ஆரம்பப் பகுதிகளில் முயற்சித்த பிரபாகரன், இதனைத் தொடரமுடியாது என்பதை உணர்ந்துகொண்டார். புலிகளிடம் உள்ள வளங்களைப் பொறுத்தவரை இது மிகவும் விலை மதிப்பானது என்பதையும் விளங்கிக்கொண்டார்.

இராணுவம் எல்லா இடங்களிலும் ஏககாலத்தில் காணப்படும்போது புலிகள் ஒரு கெரில்லா அமைப்பாக இருந்து, தமது நேரத்தை நடவடிக்கைகளை மீளத்திட்டமிடுவதிலும் தம்மை மீள ஒருங்கமைத்துக்கொள்வதிலும் செலவிடுகின்றார்கள்.

இதனை இராணுவ வெற்றியாக அரசு கருதுவது பாரதூரமான பிழையாகும்.

வானின் நீலத்தை கிழித்துக்கொண்டு வரும் மின்னல் போன்று சுருக்கமாகவும் கூர்மையாகவும் தமது தாக்குதல்களை நடத்துவதில் விடுதலைப் புலிகள் வல்லவர்கள்.

ஆகவே, புலிகளை அடிமட்ட நிலைக்கு கொண்டுவந்துவிட்டோம் என்று அரசு பிழையான முடிவுக்கு வருவது சரி என்று எனக்குப்படவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்படும் தற்போதைய போரில் சிறிலங்கா அரசு தனது இலக்கை அடைந்துவிட்டதாக நீங்கள் கருதுகின்றீர்களா?

அரசாங்கம் என்பது போர் தொடர்பாகவே சிந்திக்கக்கூடாது. போரை நான் வெறுக்கின்றேன். போருக்கு ஆதரவளிக்க என்னால் முடியாது. தனது நாட்டு மக்களுக்கு எதிராக ஒரு போரை நடத்துவது தொடர்பாக எந்த ஒரு அரசும் சிந்திக்கவே கூடாது.

ஆனால், இலங்கையில் அது நடைபெறுகின்றது. அரசு, தனது எதிரிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் தனது சொந்த மக்களுக்கு எதிரான- கீழ்த்தரமான- ஒரு போரை நடத்திவருகின்றது.

“இன்றைய உலகில் முழுமையான ஒழுக்கத்துடனும் தனது தலைமைக்கு விசுவாசமாகவும் ஒரு விடுதலை அமைப்பு உள்ளதென்றால் அது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒன்றேதான்.”

நான் அரசாங்கத்தில் இல்லை. அப்படி இருந்திருந்தால், போரை நடத்துவதற்கான கட்டாய நிலைக்கு நான் தள்ளப்பட்டால், அமைதியை கொண்டுவருவதற்கான பேச்சுக்களுக்கு ஒரு கருவியாகவே போரை- கடைசி தெரிவாக- பயன்படுத்தியிருப்பேன்.

அமைதியும் சுபீட்சமும்தான் எந்த அரசினதும் இலக்காக இருக்கமுடியும். போர் என்பதன் அர்த்தம் முடிவு. போர் எனப்படுவது ஒரு நாட்டின் அமைதிக்கும் சுபீட்சத்துக்கும் உறுதி நிலைக்குமான முடிவாகவே இருக்கமுடியும்.

இலங்கையைப் பொறுத்தவரை போர்தான் போருக்கு முடிவாக இருக்கமுடியும் போல தெரிகின்றது. பல தனிநபர்களினதும் குழுக்களினதும் விருப்பத்துக்கு அமையவே போர் தொடரப்படுகின்றது.

அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எதிர்காலத்தில் உடனடிப் பேச்சுக்கள் ஆரம்பமாகும் சாத்தியங்கள் உள்ளனவா?

நிச்சயமாக நடைபெறும். ஆனால், இந்த வருடம் அல்ல. தமது அதிகாரத்தை இழந்துகொண்டிருக்கும் தலைவர்களைக்கொண்ட இரண்டு நாடுகள் இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதை பலர் உணரவில்லை. ஆம். இந்தியாவும் அமெரிக்காவும்தான் அவை.

இந்த ஆண்டுடன் அமெரிக்காவில் புஷ் பதவி இழக்கின்றார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுடன் புதிய அரசியல் முன்னணி ஆட்சிக்கு வரவுள்ளது.

ஆகவே, இன்னும் ஒரு வருடத்துக்குள் சிறிலங்காவில் அமைதிப்பேச்சு எதுவும் நடைபெறப்போவதில்லை. தற்போது ஏற்பட்டிருப்பது ஒரு வெற்றிடமான காலப்பகுதி.

சிறிலங்கா அரசு, வேகமாகவும் உக்கிரமாகவும் போரில் இறங்கியிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். முக்கியமாக, வரப்போகும் மழை காலத்துக்குப் பின்னர் போரை மேலும் தீவிரப்படுத்தும்.

தற்போதைய சூழ்நிலையில் இந்தியா என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

இலங்கைப் பிரச்சினை தொடர்பில் இந்தியா மிகவும் கவலை கொண்டுள்ளது. இந்திய அமைதிப்படை விவகாரத்துக்குப் பின்னர் இலங்கையில் நேரடியான இராணுவத் தலையீட்டை மேற்கொள்ள இந்தியா தீவிரமாக இல்லை.

ஆனால், பிராந்தியம், பாதுகாப்பு, உபகண்ட உறுதிநிலை ஆகியவை தொடர்பிலேயே இந்தியா, இலங்கை விவகாரத்தில் மிகவும் தீவிரமாகவுள்ளது.

ஆனால், இலங்கையில் அமைதிப்பேச்சுக்களுக்கு அனுசரணை வழங்குமளவுக்கு இந்தியாவில் தற்போது ஆட்சியில் உள்ள அரசுக்கு விருப்பமோ நேரமோ இல்லை.

அதற்காக, இந்தியா முற்றுமுழுதாக இலங்கை விவகாரத்திலிருந்து விலகி விட்டதாக அது அர்த்தமாகிவிடாது. இலங்கையை முழுமையாக போர் சூழ்ந்தநிலை இருக்கக்கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கின்றது.

அண்மையில் இலங்கைக்கான இந்திய உயர்மட்டக்குழுவினரின் திடீர்ப் பயணம், அதன்பின்னர் வெளியான இந்தியாவின் இராணுவ உதவி குறித்தான செய்தி ஆகியவை தொடர்பான உங்கள் கருத்து என்ன?

நான் மேற்கூறிய காரணங்களே இந்தப் பயணத்தின் நோக்கமாகும். உயர்மட்டக்குழுவினரின் இந்த வருகை வழமையாக நடைபெறுகின்றதொரு பயணமோ அல்லது பொதுமக்கள் தொடர்பான பயணமோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய அரசானது அரசியல் குழப்பநிலைக்குள் சிக்கி, தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரத்தை இழந்து செல்லவேண்டிய நிலையில் தேர்தலை எதிர்நோக்கி வங்குரோத்தான நிலையில் உள்ளது என்ற கணிப்பீடு சிங்கள அதிகாரப்பீடத்தின் மத்தியில் உள்ளது என்பது இந்திய அரசுக்கு தெரியும்.

இந்தியாவின் இந்த நிலை சிங்கள ஆட்சிப்பீடத்தின் ஒரு பகுதியினருக்கும் பல ‘கண்டுபிடிப்புக்களுக்கு’ வித்திட்டிருக்கின்றது. இந்த கண்டுபிடிப்புக்களுக்கு எதிரான- கடுமையான- தனது எச்சரிக்கையை விடுப்பதற்கே இந்திய உயர்மட்டக்குழு அண்மையில் கொழும்புக்கு சென்றிருந்தது.

விடுதலைப் புலிகளினதோ சிறிலங்கா அரசினதோ ஆதிக்கநிலையை இந்தியா விரும்பவில்லை.

வெகுதூரத்திலுள்ள அமைதி உடன்பாட்டால் இலங்கையில் அமைதிக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில், வரையறைக்குட்பட்ட வன்முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் அரசும் புலிகளும் சமபலத்தை பேணிக்கொள்ளட்டும். நிலைமை கைமீறிப்போகுமளவுக்கு பாரிய போர் ஏற்பட்டுவிடக்கூடாது.

இதுவே இந்தியாவின் பாதுகாப்புத்தரப்பினதும் வெளிவிவகாரத் தரப்பினதும் இலங்கை தொடர்பான பார்வையும் எதிர்பார்ப்பும் ஆகும்.

“பிரபாகரன் பொறுமையான மனிதர். அவர் நேரத்தை வீணடித்து நான் பார்த்ததே இல்லை. அவரது மூளை ஏதாவது ஒருவிடயத்தை நோக்கி எந்நேரமும் துடித்துக்கொண்டே இருக்கும்.”

தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான மேற்கு நாடுகளின் பார்வையில் கொள்கை மாற்றங்கள் ஏதாவது ஏற்பட்டுள்ளனவா? கனடாவிலும் இத்தாலியிலும் அண்மையில் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களின் பின்னணியில், இது தொடர்பில் உங்கள் விளக்கம் என்ன?

புஷ் ஆரம்பித்த பயங்கரவாதத்துக்கு எதிரான போரினால், சுதந்திரத்துக்காகப் போராடும் அமைப்புக்கள் உட்பட அனைத்து குழுக்களும் பயங்கரவாத அமைப்புக்கள் என்ற பெயருக்குள் அடக்கப்பட்ட மிகப்பெரிய தவறு இடம்பெற்றிருக்கிறது.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தப் போர் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நடைபெற்றிருக்குமானால், நெல்சன் மண்டேலா உலகின் மிகப்பயங்கரமான தீவிரவாதியாக முத்திரை குத்தப்பட்டு இன்னமும் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருப்பார். அதேவேளை, மண்டேலா அண்மையில்தான் பயங்கரவாதிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனப்படுவது பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளையும் விடுதலை அமைப்புக்களின் நடவடிக்கைகளையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. நோர்வேயின் பிரதி அமைச்சரும் இலங்கையின் அமைதி முயற்சிகளின் அனுசரணையாளருமான விதார் ஹெல்கிசன் இது தொடர்பில் அருமையான ஆய்வறிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ஆகவே, உலகின் பார்வையில் விடுதலை அமைப்புக்களும் பயங்கரவாத அமைப்புக்களாக காணப்படுகின்றன. அந்தவகையில், விடுதலைப் புலிகள் அமைப்பும் பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்டு பலநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பயங்கரவாத அமைப்புக்களாக சித்தரிக்கப்பட்ட அமைப்புக்களுடன் அமைதிப்பேச்சுக்களை நடத்த மறுத்து பல நாடுகள் கதவடைத்துள்ளன. இந்த நடவடிக்கை விடுதலை அமைப்புக்களை அழித்தொழிக்க முயற்சித்துவரும் அரசுகளின் கைதுகளை பலப்படுத்தியுள்ளன.

தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் என்ன நினைக்கின்றீர்கள்?

தமிழ்மக்களுக்கு விடுதலைப் புலிகள் தொடர்ந்து பக்கபலமாக உள்ளார்கள்.

பயங்கரவாதம் தொடர்பில் பேசும் ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய நாடுகளும் பயங்கரவாதத்துக்கு இதுவரை காலமும் ஒரு வரைவிலக்கணம் கொடுக்கவில்லையே என்று நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்பட்டதுண்டா? அந்தச் சொல்லை விளக்குவதில் அப்படி என்ன கஷ்டம் இருக்கின்றது?

அப்பாவி மக்களை காயப்படுத்துவதோ கொலை செய்வதோ அல்லது அவர்களின் உடமைகளுக்குச் சேதம் விளைவிப்பதோ அவை தொடர்பான எதுவும் பயங்கரவாதமே ஆகும். அப்படியானால், எல்லா நாடுகளும் சேர்ந்து ஏன் இதனை வரைவிலக்கணமாக கொள்ளக்கூடாது.

ஏனெனில், சுருக்கமாக- தெளிவாக- அர்த்தமளிக்கும் இந்த வரைவிலக்கணம் பல நாடுகளுக்கு பயங்கரவாதம் தொடர்பான குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும்.

“விடுதலைப் புலிகளினதோ சிறிலங்கா அரசினதோ ஆதிக்கநிலையை இந்தியா விரும்பவில்லை.”

பின்னர், அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தானியா, ரஷ்யா, இந்தியா, நேபாளம், சீனா, பாகிஸ்தான், சிறிலங்கா, எகிப்து எனப் பல நாடுகள் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிவரும். இவை அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்தை நேரடியாகவோ மறைமுகமாககவே தமது தந்திரோபாயமாக பயன்படுத்தி வருகின்றன.

ஆனால், இதில் எத்தனையோ இரட்டை வேடங்கள். வானூர்தியில் குண்டுவைத்ததற்காக லிபியாவின் கடாபியை தனது காலடிக்கு கொண்டுவந்துள்ள அமெரிக்கா, முன்னர் ஈரான் வானூர்திக்கு குண்டுவைத்த தனது குற்றத்துக்கு என்ன தண்டனை வைத்திருக்கின்றது?

பயங்கரவாதம் என்பது இராணுவ விடயம் அல்ல. அது அரசியல் விடயம். கொள்கையற்ற உலக அரசியல் தர்மத்தின் கீழ் அமைப்புக்கள் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்படும். பின்னர், அதே தர்மத்தின் கீழ் பயங்கரவாதிகள் பட்டியலிலிருந்து நீக்கப்படும். அவ்வாறு நீக்கப்படாவிட்டாலும்கூட, பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்கா போன்ற அரசுகளே அந்த அமைப்புக்களுடன் மறைமுகமாக பேச்சு நடத்தும். ஆயுதங்கள் வழங்கும். நிதியுதவி செய்யும்.

ஈரானின் அகமட்நிஜாட் அரசை கவிழ்ப்பதற்கு 400 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ள அமெரிக்கா, தான் பயங்கரவாத அமைப்புக்களாக தடைசெய்துள்ள ஈரானிய அமைப்புக்களையே தனது இந்த திட்டத்துக்கு பயன்படுத்துவதாக நியூயோர்க்கர் பத்திரிகையில் சைமர் ஹேர்ஷ் என்பவர் அண்மையில் எழுதியுள்ளார். அமெரிக்கா கடந்த காலத்தைப் போலவே தற்போதும் ஈரானிய பயங்கரவாத அமைப்புக்களுடன்- மும்முரமாக- இணைந்து செயற்பட்டு வருகின்றது.

கொள்கைகளை அரசியல் வென்று வருகின்றது.

இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியா காண்பிக்கும் போக்கில் தமிழ்நாட்டு அரசு செலுத்தும் செல்வாக்கு என்ன என்று கருதுகின்றீர்கள்?

தமிழ்நாட்டு நிலைமை 80 களில் காணப்பட்டது போன்று இப்போது இல்லை. இந்தியாவும் தமிழ்நாடும் அந்த நிலைமையிலிருந்து மாறியுள்ளன. வன்முறை குழிக்குள் சிக்குண்டு அதிலிருந்து மீளமுடியாமல் துன்பப்படும் இலங்கைத் தமிழர்களுக்கு, காலநீட்சியால் இந்தியாவில் இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

இந்தியாவில் பெரும்பகுதி மக்கள் தமது வாழ்க்கையில் முன்னேற்றமடைந்து- முக்கியமாக மத்திய தர மக்களும் புத்திஜீவிகளும்- சுயநலமுள்ளவர்களாக மாறிவிட்டார்கள்.

எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்று நிலையிலேயே இன்று ஒவ்வொரு சராசரி இந்தியக் குடிமகனும் உள்ளான். இந்தியாவிலோ நேபாளத்திலோ ஏன் இந்தியாவின் பின்தங்கிய இடங்களில்கூட என்ன நடைபெறுகின்றது என்பதை அறிவதில் அவர்களுக்கு பெரிய ஆர்வமொன்றும் இல்லை.

இந்தியாவின் சராசரி குடிமகன் ஒருவர் இலங்கை விடயத்தில் காண்பிக்கும் ஆர்வத்திலும் பார்க்க, மன்மோகன் சிங் அதிகம் ஆர்வம் காண்பிக்கின்றார் என்று நான் கூறுவேன்.

அதறகு ஊடகங்களும்தான் காரணம். ஏனைய நாடுகளில் காணப்படுவதைப் போலவே இந்தியாவிலும் ஊடகங்கள், நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ஊடகங்கள் அற்ப விடயங்களான துடுப்பாட்டம், திரைப்படம், நட்சத்திரங்களின் வாழ்க்கை முறை போன்றவற்றுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

உண்மையான, முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டிய விடயங்களுக்கு இந்திய ஊடகங்கள் அளிக்கும் முன்னுரிமைக்கும் அவற்றுக்கு உண்மையில் எவ்வாறான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற நிலைமைக்கும் இடையில் பெரிய இடைவெளி காணப்படுகின்றது.

ஊடகங்களைப் பொறுத்தவரை அவை தனது பயனாளர்களை திருப்திபடுத்துகின்றனவே தவிர சராசரி குடிமகனை அல்ல.

இலங்கை மற்றும் அனைத்துலக நிலைமை குறித்த விடுதலைப் புலிகளின் சிந்தனை, பார்வை தற்போது என்ன என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

உங்களுக்கே தெரியும் விடுதலைப் புலிகளின் சிந்தனை என்று ஒன்றும் இல்லை. பிரபாகரனின் சிந்தனை மட்டும் தான். அதுவே விடுதலைப் புலிகளின் சிந்தனை.

இன்றைய உலகில் முழுமையான ஒழுக்கத்துடனும் தனது தலைமைக்கு விசுவாசமாகவும் ஒரு விடுதலை அமைப்பு உள்ளதென்றால் அது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒன்றேதான்.

பிரபாகரன் திறமையான இராணுவ திட்டவகுப்பாளர் மட்டுமல்ல. அவர் அரசியலிலும் நுணுக்கமாக ஆராய்ந்து முடிவெடுக்க வல்லவர். அனைத்துலக அரசியல் பற்றிய ஆழமான அறிவு உடையவர். முக்கியமாக, மாறுகின்ற அனைத்துலகத்தின் போக்கு தமிழர்களின் போராட்டத்தை எவ்வாறு நேரடியாக பாதிக்கும் என்பதை புரிந்துகொள்வது தொடர்பில் பிரபாகரனுக்கு தீர்க்கமான ஞானம் உண்டு.

இதனை நாம் முன்னரும் கூறியுள்ளேன். எண்பதுகளில் விடுதலைப் புலிகளும் ஏனைய அமைப்புக்களும் இந்தியாவின் உயர் உதவிகளைப் பெற்றுவந்தன.

“இப்போது நாம் இந்தியாவின் உதவியைப் பெற்றுவந்தாலும் இதே இந்தியாவை எதிர்த்துப் போராடவேண்டிய ஒரு காலம் எமக்கு வரும்” – என்று பிரபாகரன் என்னிடம் கூறியிருந்தார்.

இந்தப் பதிலால் திகைத்துப்போன நான் “ஏன்” என்று அவரிடம் கேட்டபோது 

“சுதந்திர தமிழீழம் அமைவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. அப்படி அமைந்தால், அது இந்தியாவில் உள்ள தமிழ்மக்கள் பிரிந்து செல்வதை ஊக்குவிக்கும் காரணியாக அமைந்துவிடும் என்ற அச்சம் இந்திய அரசுக்கு உண்டு.” என்றார்.

அமெரிக்காவின் மனநிலை குறித்தும் பிரபாகரனுக்கு நன்கு தெரியும்.

பல நாடுகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் அமெரிக்கா, இலங்கையிலும் அதனைத்தான் செய்கின்றது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் பெரும் அழிவுடன் கூடிய பாரிய போரை உலகளாவிய ரீதியில் புஷ் அரசு ஆரம்பித்திருந்தது. புஷ்ஷினது இந்தப் போர் உள்ளவரை தனது இலக்கை நோக்கிய பாதையில் எதையும் அடையமுடியாது என்று பிரபாகரன் உணர்ந்துகொண்டார்

புஷ்ஷினது ஆட்சி முடியும்வரை விடுதலைப் புலிகள் அமைதியாக காத்திருப்பார்கள் என்று 2001 இலேயே நான் எதிர்வு கூறியிருந்தேன். எனது கூற்றுப் பலித்திருக்கின்றது. 2009 ஜனவரியுடன் புஷ் ஆட்சி இழக்கின்றார். அடுத்து, ஒபாமா ஆட்சிக்கு வந்தால், வித்தியாசமான அமெரிக்காவையே நாம் பார்ககமுடியும்.

உலகளாவிய ரீதியில்- கடந்த எட்டு வருடங்களில்- அமெரிக்கா பலமிழந்துள்ளதையும் அதன் பிரபலம் அற்றுப்போயுள்ள நிலைமையையும் நாம் தெளிவாக பார்க்கின்றோம். ஆதிக்க நிலையிலிருந்த அமெரிக்க வல்லரசின் போக்கு இனிவரும் ஆண்டுகளில் பலமிழந்து காணப்படும்.

வர்த்தக நெருக்கடிகள், ஆப்கானிலும் ஈராக்கிலும் மேற்கொண்ட குழப்பான போர் நடவடிக்கை, மனதளவில் சோர்ந்துபோயுள்ள நாட்டுமக்கள் போன்ற விடயங்களினால் அமெரிக்கா பெரிய சிக்கலை எதிர்நோக்கியிருக்கின்றது. அத்துடன், மீண்டும் எழுச்சி கொள்ளும் ரஷ்யா, புத்தெழுச்சி கொள்ளும் சீனா, இந்தியா, பிறேசில் ஆகியவையும் அமெரிக்காவுக்குப் பெரும் சவால்களாக அமைந்துள்ளன.

21 ஆம் நூற்றாண்டில் வித்தியாசமான உலகத்தை பார்க்கப்போகின்றோம் என்பதையே இவை கோடி காட்டுகின்றன.

இந்த உலக அரசியல் மாற்றங்களை மதிப்பீடு செய்து, அடுத்த ஆண்டுதான் பிரபாகரன் தனது நகர்வினை மேற்கொள்வார் என்று நான் நினைக்கிறேன்.

தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் அவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் ஆகியவை தொடர்பான செய்திகளை தவிர்க்கம் மேற்குலக ஊடகங்கள் குறித்து அவற்றுடன் இணைந்து பல காலம் பணியாற்றி வருபவர் என்ற ரீதியில்- நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

மேற்குலக ஊடகங்கள்- முக்கியமாக அமெரிக்க மற்றும் பிரித்தானியா- தமது அரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாக கருதும் செய்திகளையே கவனத்தில் கொள்கின்றன. அதுதான், அவர்கள் ஆப்கான் மற்றும் ஈராக் குறித்த செய்திகளை கவனிக்கின்றார்கள்.

இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினை என்பது மேற்குலக ஊடகங்கள் சார்ந்த அரசுகளுக்கு முக்கியமான விடயம் அல்ல.

அங்குள்ள ஊடகங்கள் அரச அமைப்பின் ஒரு பகுதியே ஆகும். ஆகவே, அதில் அவர்கள் பிழை விடமாட்டார்கள். அதற்காக அங்கு ஊடக சுதந்திரம் இல்லை என்று கூறமாட்டேன். ஏனைய நாடுகளை விட அங்கு அதிக ஊடக சுதந்திரம் உள்ளது.

“பயங்கரவாதம் என்பது இராணுவ விடயம் அல்ல. அது அரசியல் விடயம்.”

ஆகவே, வெளிவிவகார கொள்கைகள் மற்றும் இராணுவ- அரசியல் விவகாரங்கள் என்று வரும்போது அந்த நாட்டு அரசுகளுடன் இந்த ஊடகங்கள் மிக நெருக்கமாகவே செயற்படுகின்றன.

அந்த நாட்டு அரசுகளும் தமது போர் மற்றும் வெளிவிவகார இலக்குகளை அடைவதற்கு இந்த ஊடகங்களை மறைமுகமான கருவியாக பயன்படுத்திக்கொள்கின்றன.

ஈராக் போரின் ஆரம்பத்தில் அதனை மேற்குலக ஊடகங்கள் எவ்வாறு கையாண்டன என்பது இதற்கு நல்ல உதாரணம். புஷ்ஷினது பிரசாரத்தை அப்படியே விழுங்கிவிட்டு வாந்தி எடுத்தது போலவே அப்போது மேற்குலக ஊடகங்கள் செயற்பட்டன.

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அரசு மேற்கொண்டுள்ள அடக்குமுறை குறித்து ஊடகவியலாளர் என்ற வகையில் உங்கள் கருத்து என்ன?

வளர்ச்சியடைந்த சமூகங்கள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களை பார்த்துக்கொண்டு பொறுமை காக்கவே கூடாது. நாட்டின் குடிமக்கள் இந்த தாக்குதல்களுக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும்.

அத்துடன் பாதிக்கப்பட்ட இந்த ஊடக அமைப்புக்கள், ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் எல்லைகள் தாண்டிய ஊடக இயக்கம் மற்றும் அமைப்புக்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு தமது முறைப்பாடுகளை பதிவுசெய்ய வேண்டும். அப்போதுதான், இந்த அமைப்புக்கள் அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கமுடியும்.

ஊடகவியலாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தும் குழுக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். ஊடகவியலாளர்களை பாதுகாப்பது வளர்ச்சியடைந்த நாடு ஒன்றின் அடிப்படை கடமை.

அதேவேளை, அரசியலில் தலையிடாமல் தனது பணியைச் செய்வது ஊடகவியலாளரின் அடிப்படைக் கடமை. இப்போதெல்லாம், ஊடகவியலாளர்கள் கட்சிகளின் பேச்சாளர்களாக செயற்படும் நிலைமை அதிகரித்துவிட்டது. கட்சி அங்கத்தவராக இருந்துகொண்டு தான் செய்யவந்த பணியைச் செவ்வனே செய்யமுடியாது. இப்படியான ஊடகவியலாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும்- பொய்களையும்- அவிழ்த்து விடுகின்றனர். கட்சி சாராமல் உண்மையாக, நேர்மையாக செயற்படுவது ஊடகவியலாளனின் அடிப்படை கடமை.

நீங்கள் மீண்டும் இலங்கை செல்லவுள்ளீர்களா? இல்லை என்றால் ஏன்?

இல்லை. நான் அங்கு செல்வதாக இல்லை. நான் உங்களுக்கு முன்னர் கூறியது போன்று ஊடகங்களுக்கு இலங்கையில் நாட்டம் இல்லை.

ஆனால், என்றாவது ஒருநாள் நான் இலங்கைக்குச் சென்று பிரபாகரனை சந்தித்து அவரது வாழ்க்கை வரலாறை எழுதவேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.

எனது வாழ்க்கையில் நிறைவேறாமல் உள்ள சில கனவுகளில் அதுவும் ஒன்று.

எமது காலப்பகுதியில் உள்ளதொரு மிக முக்கியமான கெரில்லாத் தலைவர் பிரபாகரன் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

அவரது மனதை எந்த எழுத்தாளரையும்- ஊடகவியலாளரையும்- விட நான் அதிகம் புரிந்துகொள்வேன் என நினைக்கிறேன்.

பிரபாகரனின் வாழ்கை வரலாறை தமிழ்மக்கள் மட்டுமல்லாமல் முழு உலகமும் ஆழமாக புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் அவர்களை ஈர்க்கும் வகையிலும் நான் எழுதுவேன்.