Sep 01

இலங்கை முதல் போட்டியில் இந்தியாவுடன் மோதல்

பங்களாதேஷ் டாக்கா நகரில் எதிர்வரும் 4ம் திகதி 12வது தெற்காசிய உதைபந்தாட்ட சம்பியன் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்குகொள்ள அசேல மதுஷான் தலைமையிலான 20 வீரர்கள் அடங்கிய இலங்கை அணி கடந்த வாரம் பங்களாதேஷ் பயணமானது.

ஏழு நாடுகள் பங்குகொள்ளும் இத் தொடரில் ஏ. பி. என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் அப்பிரிவிலுள்ள மற்றைய அணியுடன் முதற் சுற்றில் மோதவேண்டும். அதனடிப்படையில் முதல் சுற்றில் முதலிரு இடங்களைப் பெறும் அணி அரையிறுதிக்குத் தெரிவாகும். இலங்கை அணி முதல் சுற்றில் இந்தியா, மாலைதீவு அணிகளுடன் மோதவுள்ளது.

இம்முறை தெற்காசிய உதைபந்தாட்ட போட்டியில் பங்குகொள்ளும் இலங்கை அணியைப் பற்றி இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் அனுர டி. சில்வா கூறுகையில்: இம்முறை இலங்கை உதைபந்தாட்ட அணி நம்பிக்கையுடன் சாவ் உதைபந்தாட்டத் தொடரில் பங்குகொள்கின்றது. எமது அணி அரையிறுதிக்கு முன்னேறும் என அவர் உறுதிபடக் கூறினார். இம்முறை சிறந்த அணியைத் தெரிவு செய்து சிறந்த பயிற்சிகளை அளித்து இத்தொடருக்காக தயார்படுத்தியுள்ளோம்.

2017ம் ஆண்டு நடைபெற்ற சம்பியன் உதைபந்தாட்ட தொடரை வென்ற கொழும்பு விளையாட்டுக் கழகத்தின் ஏழு வீரர்கள் இம்முறை இத்தொடரில் விளையாடுகின்றனர்.

முதல் சுற்று ஆட்டங்கள் எதிர்வரும் 4ம் திகதி ஆரம்பமாகின்றது. இலங்கை அணி முதல் சுற்றில் 5ம்திகதி இந்தியாவையும், 7ம்திகதி மாலைதீவு அணியையும் எதிர்த்தாடவுள்ளது. இதில் ஒரு போட்டியை இலங்கை அணி வென்றால் எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகும் வாய்ப்புக் கிட்டும்.

ஆனால் கடந்த காலங்களில் இலங்கை உதைபந்தாட்ட அணி சிறந்த பெறுபேறுகளைப் பெறவில்லை. 2009ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கை பல்வேறு சர்வதேச நாடுளுடன் 50 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இலங்கை 6 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. 7 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளதுடன் மீதமுள்ள போட்டிகள் அனைத்திலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே சர்வதேச தரவரிசையில் 200வது இடத்துக்கு இலங்கை அணி தள்ளப்பட்டுள்ளதுடன் ஆசியப் பிராந்திய 45 நாடுகளில் இலங்கை 44வது இடத்திலுள்ளது.

இம்முறை தெற்காசிய உதைபந்தாட்டத் தொடருக்காக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தலைவர் அனுர டி சில்வா, செயலாளர் ஜஸ்வர் உமர் ஆகியோர் கூடிய கரிசணை செலுத்தி இலங்கை அணியைப் பற்றுவித்துள்ளனர். விசேடமாக ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் தங்கயிருந்து பயிற்சிகளைப் பெறும் வசதிகளையும் அவர்கள் செய்து கொடுத்தனர். மேலும் புதிய பயிற்சியாளர் பக்கீர் அலி விசேட பயிற்சிகளை அளித்து இலங்கை அணியின் தன்னம்பிக்கையை வளர்த்துள்ளார். எனவே இத்தொடரில் இலங்கை அணி சாதிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கடைசியாக இலங்கை அணி லிதுவேனியா அணியுடன் ஜுலை மாதம் கொழும்பில் நடைபெற்ற சினேகபூர்வ போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டது. இத் தொடர் நடைபெறமுன் கடைசியாக கடந்த 29ம் திகதி இலங்கை அணி பங்களாதேஷுடன் நடைபெற்ற சிநேகபூர்வ பயிற்சி ஆட்டத்தில் 1-0 என்ற கோல்கணக்கில் அவ் அணியைத் தோற்கடித்தது.

இது 8 வருடங்களின் பின் பங்களாதேஷ் அணியை இலங்கை வெல்லும் முதல் சந்தர்ப்பமாகும். இலங்கை அணி 2015ம் ஆண்டு நடைபெற்ற சாப் தொடரில் நேபாள அணியை 1-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்தன் பின் இன்னும் ஒரு சர்வதேச போட்டியிலும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி வீரர்கள்:

அசேல மதுஷான் (தலைவர்), அனுருத்த வரகாகொட, அபீல் மொஹம்மட், ஆசிக்குர் ரஹ்மான், சரித் ரத்நாயக்க, டனுஷ்க ராஜபக்ஷ, டிலான் த சில்வா, டியுக்ஷன் பியுஸ்லஸ், ஹரிஷ் பெர்னாந்து, ஜுடி சுபுன், கவிஷ் லக்பிரிய, கவிந்து இஷான், மொஹம்மட் ரிப்னாஸ், நஸீர் பஷால், சஜித் குமார், மரியதாஸ் நிதர்ஷன், ஷசங்க ஜயசேகர, சுபாஷ் மதுஷான்.