Aug 31

குடியேற்றவாசிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு மக்ரோன் கண்டனம்

ஜேர்மனியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை போராட்டத்தை, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் கண்டித்துள்ளார்.

நாட்டில் கருத்து சுதந்திரம் காணப்படுகின்ற போதிலும், அதன்மூலம் பிறரின் மதிப்பை கலங்கப்படுத்தக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பின்லாந்தில் நேற்று (வியாழக்கிழமை) பின்லாந்து பிரதமருடன், கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஜனநாயக சமூகத்தின் ஒற்றுமையே எம்மை வலுப்பெறச் செய்வதுடன், அதுவே ஐரோப்பாவின் பொக்கிஷமுமாகும்.

அரசியல், தத்துவம், மதம் என எது சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் கருத்து தெரிவிக்க அனைவருக்கும் சுதந்திரம் உண்டு. ஆனால் அதனால் பிறர் பாதிப்படையக் கூடாது.

இதனால், வீதியில் நடைபெறும் வன்முறைகளை நியாயப்படுத்த முயற்சிக்கும் மற்றும் கருத்து சுதந்திரத்தை மழுங்கடிக்கச் செய்ய முயற்சிப்போரை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வெளிநாட்டவர்கள் அனைவரையும் விரட்டியடிப்போம் என கூறுவர் உண்மையான ஜேர்மனியர்கள் அல்லர். ஜேர்மனி இவ்வாறானவர்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல.

ஜனநாயகவாதிகள், முற்போக்கான ஐரோப்பியர்கள் என்ற வகையில் நாம் அனைவரையும் வரவேற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.