Aug 31

கல்விக்கான நிதியை உயர்த்துமாறு கோரி ஆர்ஜன்டீனாவில் ஆர்ப்பாட்டம்!

கல்விக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்படும நிதியை அதிகரிக்கக் கோரி ஆர்ஜன்டீனாவில் ஆயிரக்கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்ட அணிவகுப்பொன்றை நடத்தியுள்ளனர்.

தென் அமெரிக்க நாடுகளில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் இரண்டாவது நாடாகவுள்ள ஆர்ஜன்டீனாவின் தலைநகர் புவேனஸ் ஐரிஸில் நேற்று (வியாழக்கிழமை) அந்நாட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர்.

கொட்டும் மழையிலும் பதாதைகளை ஏந்திக்கொண்டு தலைநகரில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது.

ஆர்ஜன்டீனாவின் நாணயத்தில் இரு மடங்காக அதிகரித்த பணவீக்கத்தினால், மாணவர்களின் கல்விக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் அரச நிதியியினை 15 சதவீதத்தில் அதிகரிக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டுள்ளனர்.

உள்நாட்டு நாணயமான பெசோவின் பெறுமதியானது அதன் ஐந்தில் ஒரு மடங்கினை இழந்துள்ளது. இந்நிலையில், ஆர்ஜன்டீனாவில் முதலீட்டினை மேற்கொள்ளும் 60 சதவீதமானோர் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள அச்சப்படுகின்றனர்.

இந்த நிலை பெரும் பாரதூரமான பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் செல்லுமென அந்நாட்டு ஜனாதிபதி மௌரிசியோ மெக்றி தெரிவித்துள்ளார்.

ஆர்ஜன்டீன அரசாங்கம், உலகக் கடன் சந்தையில் கையேந்தும் நிலைக்கு செல்வதை தடுக்க வேண்டுமாயின் கடந்த ஆண்டு மேற்கொண்ட உள்நாட்டுச் செலவு வீதமான 1.3 சதவீதத்திற்கும் குறைவான உள்நாட்டு செலவுத் திட்டத்தினைப் பேணிக் கொள்ள வேண்டுமென அந்நாட்டு திறைசேரி அமைச்சர் நிகலோஸ் துஜோவ்னே குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைசாய்த்து கல்விக்கான நிதியை அரசாங்கம் அதிகரிக்குமானால், பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.