Aug 31

அவுஸ்ரேலிய அரசின் சட்டத்திற்கு பேராயர்கள் மறுப்பு!

பாவமன்னிப்புக் கூண்டில் வெளிப்படுத்தப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்கள் தொடர்பில் அவுஸ்ரேலியாவிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்கள், பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டுமென்ற சட்டத்தினை திருச்சபை பேராயர்கள் மறுத்துள்ளனர்.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்புணர்வு போன்ற குற்றங்களை புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோரும் சுய வாக்குமூலத்தினைக் கொண்டு அவர்களை கைது செய்து, நாட்டின் சிறுவர் துஷ்பிரயோகத்தினைக் கட்டுப்படுத்த அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்து சட்டமொன்றினை அமுல்படுத்தியுள்ளது.

அதற்கிணங்க, நாட்டின் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் அறிக்கை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு திருச்சபை பேராயர்கள் கலந்துரையாடலில் (Australian Catholic Bishops Conference -ACBC) நாட்டின் தலைமைப் பேராயர், குறித்த சட்டத்திற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இச்சட்டம், நாட்டின் எட்டு மாநிலங்களிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக நாட்டின் குற்றங்களை வெகுவாகக் குறைக்கும் பொறுப்பில் பாரிய பங்கினை அரசாங்கம் திருச்சபைகளுக்கு வழங்கியுள்ளது.

இதேவேளை, கடந்த ஐந்து ஆண்டுகள், அவுஸ்ரேலிய அரசாங்கம் கிறிஸ்தவ தேவாலயங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் சிறுவர் துஷ்பிரயோகத்தினை மேற்கொண்டவர்களை விசாரித்து கைது செய்யும் குழுவொன்று அந்நாட்டுப் பொலிஸாரினால் நியமித்து செயற்படுத்தப்பட்டது.

எனினும், அக்குழுவினால் பாரியளவில் வெற்றிகாண முடியவில்லை. அதற்கு கிறிஸ்தவ தேவாலயங்களும் முக்கிய காரணமாகுமென விமர்சிக்கப்படுகிறது.

வயது முதிர்ந்தவர்களுக்கு சிறுவர்கள் மீது பாலியல் ஈர்ப்பு தோன்றும் பியடொஃபைல் என்ற மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ மதகுருமார்களை, கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அடிக்கடி இடமாற்றம் செய்து அவர்களை பாதுகாத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விசாரணைக் குழுவினால் சேகரிக்கப்பட்ட தகவலுக்கிணங்க, 1950-2010 வரையான காலப்பகுதியில் ஏஞ்சலிகன் தேவாலயத்திற்கு எதிராக 1100 சிறுவர் பாலியல் வன்புணர்வுக் குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.