Aug 31

விற்பனைநிலையத்தில் 5000 ரூபா நாணயத்தாளால் குழப்பம், ஒருவர் கைது!

வவுனியாவில் நேற்று இரவு வர்த்தக நிலையம் ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்துவிட்டு 5ஆயிரம் ரூபா கள்ள நோட்டினை வியாபார நிலையத்திற்கு கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று இரவு வேப்பங்குளம், பட்டாணிக்சூர் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் மோட்டார் சைக்கிலுக்கான உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்துவிட்டு 5ஆயிரம் நோட்டினை இளைஞர் ஒருவர் வர்த்தக நிலையத்திற்கு வழங்கியுள்ளார்.

இதையடுத்து குறித்த 5ஆயிரம் ரூபா நோட்டில் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனை உற்று அவதானித்த வர்த்தகர் அது கள்ள நோட்டு என அடையாளம் கண்டார். இதையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளரால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் 5ஆயிரம் ரூபா நோட்டைக் கைப்பற்றியதுடன் அதனை வைத்திருந்த 24வயதுடைய நபரையும் கைது செய்துள்ளனர். அத்துடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.