Aug 31

இராணுவத்தை மீறி தனிநாடு எப்படி உருவாக முடியும்? ஜே.வி.பி கேள்வி!


தமிழர் தாயகமான வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை மீறி எந்தவொரு நிகழ்வுகளும் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை ஆகவே இவ்வாறான நிலையில் தனிநாடு எப்படி உருவாக முடியும்? என ஜே.வி.பி கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீள உருவாக்கம் பெறுவதாக கூறி மக்களை ஏமாற்றி அரசியல் லாபம் தேட அரசியலில் அநாதையாக்கப்பட்ட சிலர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, இந்த போலியான பிரசாரங்களுக்கு நாட்டு மக்கள் சிக்கிவிடக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

“நாட்டை பாதுகாக்கும் நாட்டை திருத்தும் சக்தி” என்ற தலைப்பில் ஜே.வி.பி யினர் நாடு தழுவிய ரீதியில் மக்களை தெளிவுபடுத்தும் செயலமர்வுகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக தம்புளையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்ததாவது.,

“வடக்கிலும், தெற்கிலும் மீண்டும் இனவாதம் தலைதூக்கியுள்ளது. சில இனவாதிகள் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக பொய்யான கருத்துக்களை வெளியிடுகின்றனர். வடக்கு கிழக்கு தனியாக உருவாவதற்கான வாய்ப்பு இல்லை. சில ஊடங்களும், இனவாத அமைப்புகளும் விடுதலைப் புலிகள் இயக்கம் மீள உருவாவதாக தகவல் வெளியிட்டு வருகின்றன.

யுத்தத்தை வைத்து பிழைப்பு நடத்தியவர்களே இன்று இந்த இனவாத கருத்தை பரப்புகின்றனர். வடக்கில் இராணுவத்தை தாண்டி குருவி ஒன்றுக்குக்கூட பறக்க முடியாது. ஆகவே இவ்வாறான நிலையில் தனிநாடு எப்படி உருவாக முடியும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தியதலாவ பிரதேசத்தில் குண்டு ஒன்று வெடித்தது. அந்த சந்தர்ப்பத்தில் மஹிந்தவுடன் இருக்கும் அரசியலில் அநாதைகளாக்கப்பட்ட சிலர் அந்த குண்டு வெடிப்புக்கு காரணம் விடுதலைப் புலிகள் என பொய்கூறி மஹிந்தவே மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

இது தொடர்பிலான செய்தி வெளியானது. பின்னர் அது இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால் வெடிக்கச்

செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது. எனினும் அந்த செய்தி மறைக்கப்பட்டுவிட்டது. ஆகவே விடுதலைப் புலிகள் மீள உருவாகிவிட்டார்கள் மஹிந்த மீள வரவேண்டும் என சிங்கள மக்கள் மத்தியில் செய்தியை பரப்பினர்.

சிறிலங்காவில் தற்போது நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறைமையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திவருவதற்கான காரணத்தையும் ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெளிவுபடுத்தினார்.

“ இந்த நாட்டின் அரசியலில் பல்வேறு குழப்பங்களை உருவாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை உதவியுள்ளது. இன்று ஜனாதிபதியின் முக்கிய அதிகாரிகள் சிறையில் உள்ளனர். முன்னைய ஜனாதிபதியின் முக்கிய அதிகாரிகளும் சிறையில் உள்ளனர். ஆகவே ஜனாதிபதியிடமே ஊழல் காணப்படுகின்றது என்பது நிரூபணமாகியுள்ளது.

தனது உயர் அதிகாரியான ஜனாதிபதியிடம் கூறி சில காரியங்களை செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையிலேயே அதிகாரிகள் இலஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளனர். கடந்த காலங்களிலும் இது நடந்தது. ஊழல்களின் உறைவிடமாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவி மாறியுள்ளது. இதனாலேயே சீன நிறுவனத்தால் பணம் கொடுத்து மஹிந்த ராஜபக்சவை வாங்க முடிந்துள்ளது. விலைக்கு வாங்கப்பட்ட முதலாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அல்ல, எமது நாட்டின் ஒவ்வொரு ஜனாதிபதியும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளினால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.