Aug 31

வடக்கில் சிங்கள குடியேற்றமா? மகிந்த அணி அரசியல்வாதிகளின் நிலைப்பாடு இதுதான்!

தமிழ் மக்கள் கூறுவது போல் வடக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளப்படுமாயின், மைத்ரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் எதிர்ப்பார்க்கும் தேசிய நல்லிணக்கத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது என்று தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறி மஹிந்த அணியினருடன் இணைந்து செயற்படும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அறிவித்திருக்கின்றது.


எவ்வாறாயினும் தமிழர் தரப்பால் குற்றம்சாட்டப்படுவது போல் முல்லைத்தீவு உட்பட வட மாகாணத்தில் திட்டமிட்ட எந்தவொரு சிங்கள குடியேற்றங்களும் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் கூறியுள்ள சுதந்திரக் கட்சியினர், யுத்தத்தின் போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களே மீளக் குடியேறிவருவதாக தெரிவித்துள்ளனர்.

பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ள மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்படும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கொழும்பில் இன்று (30.08.2018) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த மேலும் சில முக்கியத் தகவல்கள் பின்வருமாறு.,

டிலான் பெரேரா (நாடாளுமன்ற உறுப்பினர்) - ‘நல்லிணக்கச் செயற்பாடுகளை அமுல்படுத்துகின்ற அரசாங்கமொன்று தமிழர் பகுதிகளில் பலவந்தமாக சிங்கள மக்களை குடியமர்த்துவதில்லை. அப்படியென்றால் இந்த அரசாங்கம் நல்லிணக்கத்தை அமுல்படுத்துவதில்லை. வெறுமனே திரைப்படங்களையும், சுவரொட்டிகளையும் தயாரித்தே இந்த அரசாங்கம் நல்லாட்சியை செயற்படுத்துகிறது. எனினும் இந்த அரசாங்கம் நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடும்பங்களை குடியமர்த்துவதாக இருந்தால் நல்லிணக்கச் செயற்பாட்டிலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

எஸ்.பி.திஸாநாயக்க (நாடாளுமன்ற உறுப்பினர்) - ‘அங்கு உண்மையிலேயே சிங்களக் குடும்பங்களை குடியமர்த்துகின்றார்களா? அதில் உண்மையில்லை என்று நான் நினைக்கின்றேன்”

டிலான் பெரேரா (நாடாளுமன்ற உறுப்பினர்) - அது உண்மையென்றால் அரசின் நல்லிணக்கச் செயற்பாடுகளும் தோல்வியே. இந்த அரசாங்கம் தண்ணீர் கொடுப்பதில்லை, மின்சாரம் வழங்குவதில்லை, அபிவிருத்தி செய்வதில்லை, வீதிகளையும் அமைப்பதில்லை, நல்லாட்சியும் இல்லை. தமிழ் மக்களின் கண்களுக்கு மண்ணைத் தூவிவிட்டு பலவந்தமாக சிங்கள மக்களை குடியமர்த்த முயற்சிக்கிறது. அப்படியென்றால் நல்லிணக்கத்திலும் அரசாங்கம் தோல்வியடைந்திருக்கிறது. இந்த அரசிற்கு தமிழ் மக்களது வாக்குகளும் இல்லை, சிங்கள, முஸ்லிம் வாக்குகளும் கிடைக்கப்போவதில்லை.

எஸ்.பி.திஸாநாயக்க (நாடாளுமன்ற உறுப்பினர்) - ‘உங்களுக்கு ஒன்றைக்கூற விரும்புகின்றேன். முல்லைத்தீவில் சிங்கள மக்களும் இருந்தார்கள். அதேபோல விடுதலைப் புலிகளின் இராசதானியான கிளிநொச்சியிலும் சிங்கள பாடசாலை ஒன்றும் இருந்தது. வரலாற்றில் சிங்கள மக்கள் வாழ்ந்த இடங்களுக்கு அவர்கள் மீளச் செல்வதற்கு உரிமை உள்ளது. எமது காணிக்கு அண்மைய இடத்தில் தமிழர்கள் குடியமர்ந்தாலோ அல்லது முஸ்லிம் குடும்பங்கள் குடியமர்ந்தாலோ நாங்கள் அவர்களை விரட்டுவதில்லை. அவ்வாறே தமிழ் மக்களும் செயற்பாட்டால்தான் சிறந்தது”.