Aug 31

நிமலுக்கு சிந்தனை சக்தி குறைவாக உள்ளது: திஸாநாயக்க


தற்போதைய காலகட்டத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு சிந்தனை சக்தி மிகவும் குறைவாக காணப்படுகின்றதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொது எதிரணியின் எதிர்ப்பு ஊர்வலம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“நாங்கள் அனைவரும் பொது எதிரணியின் எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொள்வது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்ததன் பின்னரே செல்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

மேலும் நாங்கள் தனியாக செல்லவில்லை.எமது கட்சி ஆதரவாளர்களுடன் இணைந்துதான் செல்கின்றோம்.

இந்த ஊர்வலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தவிர்ந்த கூட்டு எதிர்கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 5 ஆம் திகதி கலந்துகொள்ள உள்ளனர்.

அத்துடன் புதியதொரு அரசாங்கத்தை உருவாக்கவே தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிகொண்டோம்.

அவ்வரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன, உதய கம்மன்பில ஆகியோரை உள்ளடக்கியே இப்பயணத்தை மேற்கொள்ள உள்ளோம்.

இந்த தேசிய அரசாங்கத்தை மாற்றியமைப்பது மாத்திரமே எமது நோக்கம்.

மேலும் தேசிய அரசாங்கத்தை மாற்றியமைப்பதில் நாடாளுமன்றத்திலுள்ள 23 க்கும் மேற்பட்டோருக்கு அவசியமான தேவைப்பாடாக இருக்கின்றது.

இந்தவகையில் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு தேவையென்று சொன்னால் நாம் புதிய அரசாங்கத்தை அமைத்த பின்னர் எதிரணியில் சென்று அமர முடியும்.

இவ்விடயத்தில் எங்களுக்கு எந்ததொரு பிரச்சினையும் இல்லை” என திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.