Aug 31

டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட் எடுத்த 3வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.

முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்தும், நாட்டிங்காமில் நடந்த 3–வது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இங்கிலாந்து 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி டாஸ் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து கேப்டன் ரூட் 4 ரன்கள் எடுத்திருந்தபோது இஷாந்த் சர்மா பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 250-வது விக்கெட் ஆகும். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுக்களை வீழ்த்திய 3-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையையும் இஷாந்த் சர்மா படைத்தார். கபில்தேவ் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.