Aug 30

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இந்து இளைஞர் மாநாடு:

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் இந்து இளைஞர் மாநாடு  கடந்த  ஞாயிற்றுக்கிழமை(26)காலை, மாலை என இரு அமர்வுகளாக  சிறப்பாக இடம்பெற்றது.யாழ்.வண்ணார்பண்ணைச் சிவன் ஆலயத்தில் இருந்து   காலை- 09 மணியளவில்  நாதஸ்வர, மேள வாத்தியங்கள், பாரம்பரியக் கலை, கலாசார நிகழ்வுகளுடன் ஆன்மீக ஊர்வலம் ஆரம்பமாகியது.

இந்து இளைஞர் மாநாட்டில் கலந்து கலந்து கொள்வதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து விசேடமாக வருகை தந்த தமிழ்நாடு உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், பிரபல சொற்பொழிவாளருமான இலக்கியச்சுடர் த. இராமலிங்கம், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் முதல்வர் வண.ஸ்ரீமத்.சுவாமி அஷராத்மானந்த மகராஜ், யாழ்ப்பாணம் சின்மயாமிஷன் தலைவர் வண. சிதாகாஷானந்தாசுவாமிகள், கந்தர்மடம் வேதாந்தமடத் தலைவர் வண. வேதவித்யாசாகர சுவாமிகள், சுன்னாகம் கதிரமலைச் சிவன் கோயில் பிரதம குரு முத்தமிழ் குருமணி கலாநிதி- நா.சர்வேஸ்வரக் குருக்கள், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளரும், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் ஓய்வுநிலை அதிபருமான சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம்,சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஸ்தாபகர் இலக்கிய கலைமணி சிவபாதம் கணேஸ்குமார்,   பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் வ.மகேஸ்வரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாட் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை மற்றும் தமிழருவி த. சிவகுமாரன், ,சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கைக்கான தலைவர் சிவ. கஜேந்திரகுமார்,   எழுத்தாளர்  மறவன்புலவு க.சச்சிதானந்தன், மூத்த ஆன்மீகவாதி சிவதொண்டன் நா. முருகையா  கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பிரதி அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன், எழுத்தாளர் மேழிக்குமரன் இலண்டலிருந்து வருகை தந்த தொழிலதிபர்கள் உள்ளிடடோர்   ஊர்வலத்தில் கலந்து சிறப்பித்திருந்தனர்

நாதஸ்வர, மேள வாத்தியங்கள்   வட்டுக்கோட்டை கலைஞர் மன்றத்தின் பொம்மலாட்டம் நீர்வேலி றோ. க. த. க பாடசாலை மாணவிகளின் புத்தெழில் கரகம், போன்ற பாரம்பரியக் கலைநிகழ்வுகள் முன்னே செல்ல அறநெறிப்பாடசாலை மாணவ, மாணவியர் இந்துத் தெய்வங்கள் மற்றும் நாயன்மார்களின் வேடமணிந்து வருகை தந்தனர்.இந்த ஊர்வலத்தில் இளைஞர், யுவதிகள், மாணவ, மாணவிகள், பல்துறைசார்ந்த கலைஞர்கள், மூத்தோர்கள் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் உறுப்பினர்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.நந்திக் கொடிகள் ஏந்தியவாறு ஆரம்பமான ஊர்வலம்  இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தைச் சென்றடைந்தைத் தொடர்ந்து அங்கு சுன்னாகம் கதிரமலைச் சிவன் கோயில் பிரதம குரு முத்தமிழ் குருமணி கலாநிதி- நா.சர்வேஸ்வரக் குருக்கள் மங்கள விளக்கேற்றி மாநாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

முற்பகல்-10.30 மணிக்கு ஆரம்பமான மாநாட்டின் காலை அமர்வு நிகழ்வுகளின் வரிசையில் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி- சைந்தவி ஜனார்த்தனன் கடவுள் வாழ்த்து இசைத்தார்.காலை அமர்வின் சிவயோக சுவாமிகள் அரங்கத் திறப்புரையை யாழ். பல்கலைக்கழக இந்துநாகரீகத் துறை விரிவுரையாளர் இ. ரமணராஜா நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து சுன்னாகம் கதிரமலைச் சிவன் கோயில் பிரதம குரு முத்தமிழ் குருமணி கலாநிதி- நா.சர்வேஸ்வரக் குருக்கள், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் முதல்வர் வண.ஸ்ரீமத்.சுவாமி அஷராத்மானந்த மகராஜ், யாழ்ப்பாணம் சின்மயாமிஷன் தலைவர் வண. சிதாகாஷானந்தாசுவாமிகள் ஆகியோரின் ஆசியுரைகள், ஊவா வெல்லச பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் இ. சர்வேஸ்வராவின் தலைமையுரை, பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் வ.மகேஸ்வரனின் வாழ்த்துரை என்பன இடம்பெற்றன.

தொடர்ந்து நீர்வேலி றோ. க. த. க பாடசாலை மாணவிகளின் புத்தெழில் கரகம், யாழ்.யோகா உலகம் அமைப்பின் விசேட யோகா அரங்கம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.புத்தெழில் கரகம் தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்திருந்ததுடன் கரகாட்டத்தில் புதியதொரு முயற்சியின் வெளிப்பாடாகவும் சிறப்பாக அமைந்திருந்தது. 

தொடர்ந்து மேடையேறிய யாழ்.யோகா உலகம் அமைப்பினரின் விசேட யோகா அரங்கம் நிகழ்வுகள் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த அனைவரும் வியக்கும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தது. குறித்த யோகா அரங்கம் யாழ்.யோகா உலகம் அமைப்பின் இயக்குனரும், யோகாப் போதனாசிரியருமான சி.உமாசுதன் மற்றும் யோகாப் போதனாசிரியர் யோ. பிரசாத் ஆகியோரின் நெறியாள்கையில் இடம்பெற்றது. 

அதனைத் தொடர்ந்து சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஸ்தாபகர் இலக்கிய கலைமணி சிவபாதம் கணேஸ்குமாரின் ஸ்தாபகர் உரை, இந்து இளைஞர் மாநாட்டில் கலந்து கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழ்நாடு உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், பிரபல சொற்பொழிவாளருமான இலக்கியச் சுடர் த. இராமலிங்கத்தின் “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” எனும் தலைப்பிலான சிறப்புரை என்பன இடம்பெற்றன.அதனைத் தொடர்ந்து லயப்ரம்மம் நிகழ்வு அரங்கேறியது. லயப்ரம்மம் நிகழ்வில் பாட்டு- அ அமிர்தசிந்துஜன், வயலின் கா.குகபரன், மிருதங்கம் நா.சிவசுந்தரசர்மா, கடம் நா. மாதவன், முகர்சிங் செ. செந்தூரன் ஆகியோர் நிகழ்த்தினர்.

தொடர்ந்து இந்துசமயம் நேற்று, இன்று, நாளை எனும்  பொருளில் “தமிழ்மாமணி” தமிழருவி த. சிவகுமாரன் தலைமையில் கருத்தாடு களம் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஆலயங்கள் எனும் தலைப்பில் சி.சிவாம்சனும், இல்லங்கள் எனும் தலைப்பில் த. கருணாகரனும்,வேலைத்தங்கள் எனும் தலைப்பில் குண.சுதாகரனும், பொது இடங்கள் எனும் தலைப்பில் கலாபூஷணம் மேழிக்குமரனும்  நிகழ்த்தினர். கருத்தாடு களத்துடன் மாநாட்டின் காலை அமர்வுகள் நிறைவு பெற்றது. 

மாலை அமர்வுகள் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அரங்கில் சர்வதேச  இந்து இளைஞர்  பேரவையின் இலங்கை கிளைத்தலைவர் சிவ.கஜேந்திரகுமார் தலைமையில்  நடைபெற்றன.  திருமதி  சுபாஜினி விஜேந்திரன் அவர்களின்  கடவுள் வாழ்த்துடன்  நிகழ்வுகள் ஆரம்பமாகின .  அரங்க திறப்புரையினை   பேராசிரியர் மனோன்மணி  சண்முகதாஸ் நிகழ்த்த   வாழ்த்துரையினை  தகைசார் வாழ்நாள் பேராசிரியர்  யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க  பெருந்தலைவர்,  அ.சண்முகதாஸ் அவர்களும் யாழ். பல்கலைக்கழக  ஓய்வுநிலை பேராசிரியர், எஸ். சிவலிங்கராஜா அவர்களும் நிகழ்த்தினர்.அதனைத் தொடர்ந்து  சிவத்தமிழ்  வித்தகர்  சிவ.மகாலிங்கம் தலைமையில்  இளையோர் கருத்தரங்கு  நடை பெற்றது

அதனைத் தொடர்ந்து புராண  வித்தகர்    வே.விநாசித்தம்பி அவர்களுக்கு சிவனருட்செல்வர்   ஓய்வு பெற்ற அதிபர்   ஜ.தயானந்தராஜா அவர்களுக்கு வித்யா திலகம்   மூத்த ஊடகவியலாளர்    பொ.மாணிக்கவாசகம் அவர்களுக்கு ஊடகப் பேரொளி எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்   அதனைத் தொடர்ந்து இந்து இளைஞர்  மாநாட்டு மலரை யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் கி.விசாகரூபன்   வெளியிட சமூக சேவகர் சி.திருக்கேதீஸ்பரன் பெற்றுக்கொண்டார். மலர்  வெளியீட்டுரையினை யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை உதவி விரிவுரையாளர் கலாநிதி இ.ஜெயந்திரன் நிகழ்த்தினார் 

அதனைத் தொடர்ந்து  நர்த்தன ஷேத்ரா  நடனக்கலையகத்தின் கண்ணப்பர் குறவஞ்சி நாட்டிய நாடகமும் யாழ்.இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் திருப்புகழ் நடனம்  பார்ப்போரை மெய் மயக்கும் வகையில் இடம்பெற்றது    அதனைத் தொடர்ந்து  இலக்கியச் சுடர் த.இராமலிங்கம் (தமிழ்நாடு) தலைமையில் சிறப்பு பட்டி மண்டபமும்    அதனைத் தொடர்ந்து  பி.ஜானுஜனின் நன்றியுரையுடன்  நிகழ்வுகள் நிறைவு பெற்றன

 கடந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான அன்பர்களின் பங்கேற்புடன் பேரெழுச்சியாக இந்து இளைஞர் மாநாடு இடம்பெற்றது. இந்நிலையில் இம்முறை இந்து இளைஞர் மாநாடு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.