Aug 30

முதல் வெற்றியை பதிவு செய்தது அயர்லாந்து அணி!

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அயர்லாந்து அணி 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.

பெல்பாஸ்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, கடும் நெருக்கடிக்கு மத்தியில் துடுப்பெடுத்தாடி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக நஜிபுல்லா ஸத்ரான் 42 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் டிம் முர்டாக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து, 183 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்து அணி, 43.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அயர்லாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அயர்லாந்து அணி சார்பில், அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஆண்ட்ரூ பால்பிரினி 60 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளையும், மொஹமட் நபி 2 விக்கெட்டுகளையும் பெற்றுக்கொண்டார்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி, நாளை பெல்பாஸ்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.