Aug 30

ஜேர்மன் அதிபர் செனகல் விஜயம்!

உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு ஜேர்மனி அதிபர் அங்கெலா மேர்கல் செனகல் நாட்டிற்குச் சென்றுள்ளார்.

செனகல் தலைநகர் டகாரில் நேற்று (புதன்கிழமை)  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்நாட்டு ஜனாதிபதி மெக்கி சால் இத்தகவலை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

ஆபிரிக்க நாடுகளின் உள்நாட்டு வர்த்தகத்தை முன்னேற்றும் விதமாக நிதி உதவிகளையும் முதலீடுகளையும் மேற்கொள்வது தொடர்பில் செனகலுடன் கலந்துரையாடும் முகமாகவே இவ்விஜயம் அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இளைஞர்களின் வேலைவாய்ப்புக்களை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

செனகலில் இன்று பல்வேறு சந்திப்புகளில் ஈடுபடவுள்ள  ஜேர்மன் அதிபர், அதனைத் தொடர்ந்து கானா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

வறுமை காரணமாக ஆபிரிக்க நாடுகளிலிருந்து ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக படகில் பயணிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களின் வரவைத் தடுக்கும் முயற்சியில் ஐரோப்பிய நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார தரத்தினை மேம்படுத்தும் போது, அந்நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு புகலிடம் கோரிச் செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. அதனை கருத்திற்கொண்டு, அந்நாடுகளின் பொருளாதார தரத்தினை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஜேர்மனி மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.