Aug 30

ஸ்ரீ லங்கா இராணுவத்தை நாடும் சர்வதேசப் படைகள்!

சிறிலங்கா இராணுவத்தினரால் ஒன்பதாவது தடவையாகவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள நீர்காகம் போர்ப் பயிற்சிகள் செப்டெம்பர் ஆறாம் திகதி முதல் 26 ஆம் திகதிவரை மின்னேரியா மற்றும் திருகோணமலை குச்சவெளிப் பகுதிகளில் நடைபெறவுள்ளன.

இம்முறை நீர்காகம் போர்ப் பயிற்சிகளில் 23 நாடுகளைச் சேர்ந்த இராணுவத்தினரும் கலந்துகொள்ளவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்த சிறிலங்கா இராணுவம் தமது போர் அனுபவங்களையும், போர்த் தந்திரங்களையும் வெளிநாட்டு இராணுவத்தினருக்கு கற்றுக்கொடுக்கும் நோக்கில் 2010 ஆம் ஆண்டு முதல் தியகாவா போர் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய இம்முறை திருகோணமலை குச்சவெளி மற்றும் மின்னேரிய பகுதிகளில் ஒன்பதாவது தியக்காவா போர் பயிற்சிகள் இடம்பெறவுள்ளதாக நேற்றைய தினம் சிறிலங்கா இராணுவத்தின் பொறியல் மற்றும் இயந்திர பிரிவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இம்முறை போர்ப் பயிற்சிகளுக்கு பொறுப்பாக இருக்கும் கிளிநொச்சி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவன தெரிவித்தார்.

போர்த் தந்திரங்கள் விசேட படை நடவடிக்கைகள், உட்பட சிறிலங்கா இராணுவத்தின் விசேட அனுபவங்களை கற்றுக்கொடுக்கும் நோக்கில் நடைபெறவுள்ள இந்த போர்ப் பயிற்சிகளில் இம்முறை 2500 இராணுவ அதிகாரிகள் உட்பட சிப்பாய்களும், 400 கடற்படையினரும் 200 விமானப் படையினரும், 23 நாடுகளைச் சேர்ந்த 100 படையினரும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவன குறிப்பிட்டார்.

மின்னேரியவில் அமைந்துள்ள இராணுவக் கட்டளைத் தலைமையகத்தில் எதிர்வரும் செப்டெம்பர் ஆறாம் திகதி தியகாவா போர் பயிற்சிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்படும் என்றும் தெரிவித்த மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவன, செப்டெமர் 26 ஆம் திகதி வரை திருகோணமலை குச்சவெளி தாக்குதல் பயிற்சிகள் இடம்பெறும் என்றும் கூறினார்.

இந்தப் பயிற்சிகளில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஸ்யா, பிறேசில், அவுஸ்திரேலியா, மலேசியா, பாகிஸ்தான், இந்தியா, சீனா, பங்களாதேஷ், நேபாளம், ஜப்பான், இந்தோனேசியா, நைஜீரியா, சூடான், துருக்கி மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளின் இராணுவத்தினர் கலந்துகொள்ளவுள்ளனர்.