தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுக்கு பாடுபட வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் வாழ்த்து
திமுக தலைவராக மக்களின் நல்வாழ்வுக்கு தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று மு.க. ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், திமுக தலைவராக தாங்கள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களுடைய அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற்று, மக்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன். திமுக தலைவராக இருந்த கருணாநிதி, சமூக நீதி, மாநில சுயாட்சி ஆகியவற்றுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்.
அவரது பன்முக ஆற்றலுடன் கருணாநிதியின் கொள்கை, லட்சியங்களை நீங்கள் நிறைவேற்ற அயராது பாடுபடுவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை என்று கூறியுள்ளார்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்): திமுகவின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் சென்னையில் நடந்த கட்சியின் பொதுக்குழுவில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் பாமக சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.