Aug 30

சமூகவலைத்தளங்கள் மூலம் அவதூறு பரப்ப வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

சமூக வலைதளங்கள் மூலம் அவதூறு பரப்ப வேண்டாம்’’ என்று பிரதமர் மோடி பாஜ தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடி நேற்று தனது சொந்த தொகுதியான வாரணாசியில் பாஜ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:சமூக வலைதள ஊடகங்ளை ஒருபோதும் அவதூறைப்  பரப்புவதற்காக பயன்படுத்தக்கூடாது, தங்களைச் சுற்றி பல நல்ல விஷயங்கள் உள்ளன. அதனை பரப்புவதற்காக பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் மக்கள்  கண்ணியத்தின் எல்லைகளை தாண்டி வருகிறார்கள். அவர்கள் தவறான தகவலை பார்ப்பார்கள் அல்லது கேட்பார்கள். அதை மற்றவர்களுக்கு பகிர்ந்து விடுகிறார்கள்.

இதனால்  அவர்கள் சமுதாயத்தில் எவ்வளவு சேதம்  விளைவிக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியவில்லை.  சிலர் எந்தவொரு கண்ணியமான சமுதாயத்திற்கும் பொருந்தாத வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். பெண்களைப் பற்றியும் அவர்கள் தவறாக கூறுகிறார்கள் அல்லது எழுதுகிறார்கள்.

இந்த பிரச்னை எந்தவொரு அரசியல் கட்சியையோ அல்லது சித்தாந்தத்தை சேர்ந்ததோ அல்ல. ஒரு நாகரீகமான சமூகம் ஒருபோதும் இப்படி  நடந்து கொள்ளாது. இது 125 கோடி இந்தியர்கள் பற்றியது.

எனவே ஒவ்வொரு நபரும் சமூக வலைத்தளங்களில் தவறான செய்தியை பரப்புவதில்லை என்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும். சுவச் அபியான் அல்லது  சுத்தப்படுத்தும் பணிகள் நமது சுற்றுப்புறத்தை மட்டுமல்ல, நமது மனநிலையையும் நல்ல முறையில் சுத்தப்படுத்தும் ஒன்றுதான். 

எனவே நேர்மறையான செய்திகளை உருவாக்க வேண்டும். அதை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும். தவறான வார்த்தைகளை, அவதூறுகளை சமூகவலைத்தளத்தில் பரப்பி பாஜ உள்பட அரசியல் கட்சிகளுக்கு  எதிரான நடவடிக்கையில் ஈடுபடுகிறவர்கள் வலதுசாரி சிந்தனையை பரப்புகிறார்கள்.

எனவே இந்தியாவின் மாறும் முகத்தை உயர்த்திப் பேசும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நாடு இப்போது வரலாற்றில் இல்லாத முன்னேற்றத்தை கண்டிருக்கிறது.இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் இப்போது மின்சாரம், பள்ளிகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளன.

நாடு மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக மாறியுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாறியுள்ளது. விமானச் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. ஏசி ரயில்களில் பயணிப்பதை விட அதிகமான மக்கள் விமானத்தில் பறக்கின்றனர்.

இந்த வளர்ச்சிகள் ஒவ்வொரு  இந்தியர்களையும் பெருமை அடைய செய்யும்.செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரை சுத்தப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மக்கள் சுகாதாரத்தை மேம்படுத்த புதிய சுகாதார திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 10 கோடி ஏழை குடுபங்கள் பயன் பெறுவார்கள்.

வாரணாசியில 2019 ஜனவரி 21 முதல் 23 வரை வெளிநாடுவாழ் இந்தியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நமது கலாச்சார நிகழ்ச்சிகள் இடம் பெற  வேண்டும்.இவ்வாறு பேசினார்.

‘விளையாட்டு, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தர வேண்டும்’

பிரபல ஹாக்கி சாம்பியன் தயான்சந்த் பிறந்த தினம் தேசிய விளையாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் செய்தி: இந்தியா சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில்  கலந்து கொண்ட வீரர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.

அவர்களது கடின உழைப்பு மிகப்பெரிய வெற்றி பயணத்தை அவர்களுக்கு அளித்துள்ளது. இந்த ஆண்டு நமது விளையாட்டுத்துறைக்கு சிறந்த ஒன்றாக அமைந்துள்ளது.

ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் நமது வீரர், வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர். எனவே பொதுமக்கள் விளையாட்டு  மற்றும் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போது சுகாதார இந்தியா உருவாக நீங்கள் பங்களிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.