Aug 30

வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா - இங்கிலாந்துடனான 4வது டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்குகிறது. 3-வது டெஸ்ட்டை போலவே இந்த டெஸ்டிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த டெஸ்டில் தோற்றால் தொடரை இழந்து விடும் என்பதால் இந்திய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கலாம். முடியாத பட்சத்தில் ‘டிரா’ செய்ய முயற்சிப்பர்.

இந்திய பேட்டிங்கில் விராட் கோலி 2 சதம், 2 அரை சதத்துடன் 440 ரன் குவித்துள்ளார். சராசரி 73.33 ஆகும். புஜாரா, ரகானே ஆகியோர் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளனர். இதேபோல ஹர்த்திக் பாண்டியாவும் கடந்த டெஸ்டில் ஆல்ரவுண்டர் வரிசையில் சிறப்பாக செயல்பட்டார். வேகப்பந்து வீச்சில் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ‌ஷமி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் இறங்குவது அதற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. வெற்றி பெற முடியாவிட்டாலும் அந்த அணி ‘டிரா’ செய்தால் தொடரை இழக்காமல் பார்த்துக் கொள்ளும். எனவே, இந்த டெஸ்டில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.