Aug 29

2019 பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் - மோடி வலியுறுத்தல்

பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் முதல்-மந்திரிகள் மற்றும் துணை முதல்-மந்திரிகள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி, கட்சி தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி, நிதின்கட்காரி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்-மந்திரிகளுடன் விவாதித்தனர்.

2019 பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர் கொள்வது என்று அதில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றனர். அதை முறியடித்து 2014 பாராளுமன்ற தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கேட்டுக் கொண்டனர்.

மத்திய, மாநில அரசின் திட்டங்களை மக்களுக்கு சரியாக எடுத்து சொல்ல வேண்டும், குறிப்பாக மத்திய மாநில திட்டங்களால் தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் எவ்வாறெல்லாம் பயன்அடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்ற விவரங்களை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள் மேம்பாடு திட்டத்தை அனைத்து தரப்பினருக்கும் விளக்கி கூறி அவர்களின் ஓட்டுக்களை பாரதிய ஜனதா பக்கம் சேர்க்க வேண்டும். குறிப்பாக விவசாயிகளுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை அதிகரித்திருப்பது பற்றி எடுத்து சொல்லி, விவசாயிகளை பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக மாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டது.

மாநில வாரியாக வலுவான கூட்டணியை பாரதிய ஜனதாவும் அமைப்பதற்கு உரிய ஏற்பாடுகளை முதல்-மந்திரிகள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் தலைவர்கள் வற்புறுத்தினார்கள்.

இந்த கூட்டத்தின் மத்தியில் விரைவில் சட்ட சபை தேர்தல் நடக்க உள்ள சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் முதல்-மந்திரிகளை பிரதமர் மோடி, கட்சித் தலைவர் அமித்ஷா தனியாக அழைத்து ஆலோசனை நடத்தினார்கள்

அவர்களிடம் ஏழைகளுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களை கடைநிலை மக்களிடம் விளக்கி கூற வேண்டும். தெளிவான பிரசார யுக்திகளை உருவாக்க வேண்டும்.

தேர்தல் வெற்றிக்கு எந்த வகையில் பணியாற்றினால் சரியாக இருக்கும் என்பதை துல்லியமாக கண்டறிந்து அதற்கு தயார்படுத்த வேண்டும் என்று கூறினார்கள்.

பீகார் துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடியை அமித்ஷா தனியாக அழைத்து பேசினார். அப்போது பீகாரில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி எப்படி அமைப்பது என்று விவாதித்தார்.

விரைவில் பீகார் முதல்- மந்திரி நிதிஷ்குமார், டெல்லி வர இருக்கிறார். அப்போது பாராளுமன்ற தொகுதி பங்கீடு குறித்து பாரதிய ஜனதா தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதை எப்படி இறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் விவாதித்தனர்.

இதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றியும் விவாதித்தனர். மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்த முடியுமா? ஒருவேளை கூட்டணி அமையா விட்டாலும் தேர்தலை எப்படி சந்திப்பது என்றும் விவாதிக்கப்பட்டது.

கூட்டம் தொடர்பாக சத்தீஸ்கர் முதல்-மந்திரி ராமன்சிங் கூறும்போது, 2019 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை முன்னிறுத்தி பாரதிய ஜனதா ஆட்சியை மீண்டும் அமைப்பது என்பது குறித்து நாங்கள் கூட்டத்தில் விவாதித்துள்ளோம்.

பிரதமர் மோடி எங்களிடம் அரசின் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் பணிகளை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

பாராளுமன்ற தேர்தல் மற்றும் விரைவில் வர இருக்கிற சட்டமன்ற தேர்தல் அனைத்திலும் எப்படி சிறப்பான வெற்றியை பெறுவது என்று நாங்கள் விரிவாக ஆலோசித்தோம் என்று கூறினார்.