Aug 29

சுற்றுலாப் பயணி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞனிடம் விசாரணை

ஜேர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் மீது கனடாவில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞனிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இம்மாத ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச்சூடு தொடர்பில், றோயல் கனேடியன் பொலிஸார் கடந்த வௌ்ளிக்கிழமை அல்பெர்ட்டாவில் வைத்து இளைஞனை கைது செய்தனர்.

அவர் மீது கொலை முயற்சி உட்பட 14 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட 60ஆவது வயதான சுற்றுலாப் பயணி கல்கறி பகுதியில் தனது குடும்பத்துடன் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தலையில் சுடப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 2ஆம் திகதியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்கு, பாதையில் ஏற்பட்ட முறுகல் நிலையே காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதை வழியாக பயணித்த குடும்பத்தின் SUV ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட கறுப்பு நிற சேடான் கார் ஒன்றிலிருந்து சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதையின் நிறுத்தத்திற்கு வருவதற்கு முன்னதாக குறித்த SUV ரக வாகனம் மரமொன்றில் மோதி நின்றுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து பொலிஸார் எந்தவித காரணத்தையும் வௌியிடவில்லை. சுடப்பட்ட சாரதிக்கும், சந்தேகநபருக்கும் இடையில் முன் பகை எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.